பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று காட்சிகள் ⚫ 57

எங்கணும் மலர்ந்த முகங்கள் விளங்கின; வாழ்த்தொலிகள் முழங்கின. சிலர் குதிரைகளின் கழுத்துக்களில் மாலைகள் அணிவித்தனர்; சிலர் உவகையோடு வெற்றிமுழக்கம் செய்து வரவேற்றனர்.

வழியெங்கும் சோகமோ துயரமோ விளைவிக்கும் காட்சி எதுவும் இளவரசர் கண்ணில் தென்பட்டு விடக் கூடாது என்று அரசர் முன்னதாகவே ஆணையிட்டிருந்தார். கூனர், குருடர், செவிடர், - முடவர், நோயாளர் எவரும் வீதிகளில் வராமல் தடை செய்வதற் காகத் தனியாகக் காவலர்கள் நியமிக்கப் பெற்றிருந்தனர். எங்கும் மகிழ்ச்சி நிறைந்திருந்தது; எவர் முகத்திலும் கவலைக் குறியே இல்லை.

மக்களின் மகிழ்ச்சி சித்தார்த்தரையும் பற்றிக் கொண்டது. பொன்னும் மணிகளும் புனைந்து செய்த இரதம் இந்திர விமானம்போல் பிரகாசித்துக் கொண்டிருந்தது. அதன்மீது தாம் பவனி வருவதைக் காண்பதில் மக்கள் கொண்ட மகிழ்ச்சியைக் கண்டு, சித்தார்த்தர், அந்த மக்களைக் கொண்ட இராஜ்யத்தைப் பெற்றிருப்பதே பெரும் பேறு என்று கருதினார். அவர் உள்ளமும் உவகையால் மலர்ந்தது. ‘நடந்தால் நாடெல்லாம் உறவு; படுத்தால் பாயும் பகை’ என்ற பழமொழிக்கு ஏற்பத் தாம் வெளியே வந்ததில் மக்கள் தம்மிடம் கொண்டுள்ள நேசத்தை அவர் நேரில் பார்க்க முடிந்தது அதனால், அளவற்ற மகிழ்ச்சி உண்டாயிற்று. இரதம் நகர வாயிலை அடைந்ததும், மேற்கொண்டு சோலையை நோக்கிச் செலுத்தும்படி அவர் பாகனிடம் கூறினார். சாரதி சந்தகன் அவ்வாறே தேரைத் திருப்பினான்.

அந்த நேரத்தில் சாலை ஓரத்திலே, தேவர்களில் ஒருவன் தன் உருமாறி, ஒரு வயோதிகப் பிச்சைக்-

போ –4