பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4

சரித்திரக் குறிப்புகளை மட்டும் ஆதாரமாய்க் கொண்டு எழுதினால், நூல் சதையற்ற எலும்புக் கூடு போலிருக்கும். கதைகளையே ஆதாரமாய்க் கொண்டு எழுதினால், புதிய புராணமாகிவிடும். எனவே சரித்திரம், புராண வரலாறு ஆகிய இரண்டையும் துணைக்கொண்டு நான் இந்நூலை எழுதியுள்ளேன். கௌதம புத்தர் சரித்திர நாயகர் என்பதிலும், அவரது வாழ்க்கையின் முக்கிய நிகழ்ச்சிகளிலும் துளியேனும் சந்தேகமில்லை. பௌத்த தருமம் இந்தியாவில் 1,500 ஆண்டுகட்கு மேலாக நிலைத்து வளர்ந்து வந்திருக்கிறது. அந்தக் காலத்திலேதான் உலகிலே இந்நாடு மகோன்னத நிலையை அடைந்திருந்தது. வட இந்தியாவிலே, கோசலம், மகதம் முதலிய சில பகுதிகளில் மட்டும் பரவியிருந்த பௌத்த சமயத்தை அசோக சக்கரவர்த்தி உலகப் பெருஞ் சமயமாக்கியிருந்தார். ‘இங்கே பகவர் பிறந்தார்’ என்று பொறித்துள்ள கற்றூண் ஒன்றை அவர் நாட்டி வைத்திரா விட்டால், பெருமான் அவதரித்த தலம்கூட உலகுக்குத் தெரிந்திருக்க முடியாது. பிறவிப் பிணி மருத்து வரும், நல்லறம் பகர்ந்த நாயகரும், சன்மார்க்கப் போத கரும், தயாவீரரும், கலைகட்கெல்லாம் நாதருமான சாக்கிய முனிவர் சம்பந்தமான கல்வெட்டுக்களும், ஸ்தம் பங்களும், ஆலயங்களும், விகாரைகளும் சரித்திரக் குறிப்புக்கள் தயாரிக்க மிகவும் உதவியாக இருக்கின்றன.

சுமார் 2,500 ஆண்டுகட்கு முன்னர் ததாகதராகிய புத்தருடன் நெருங்கி வாழ்ந்து வந்த ஆதிச்சீடர்கள் பதின்மர்: காசியபர், ஆனந்தர், சாரீபுத்திரர், மௌத் கல்யாயனர், அநுருத்தர், சூபூதி, பூர்ணர், காத்தியாயனர், உபாலி, இராகுலர். இவர்களில் சாரீபுத்திரர் பகவருடைய கடைசி யாத்திரையில் சில இடங்களுக்கு மட்டும் அவரோடு சென்றுவிட்டுத் தமது கிராமத்திற்குச் சென்று