பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று காட்சிகள் ⚫ 59

இதைப்பற்றியெல்லாம் இளவரசர் கவனிப்பானேன்!” என்று சந்தகன் விளக்கிக் கூறினான்

இளவரசர் முகம் வாட்டமடைந்தது. அவர் உள்ளம் உருகிவிட்டது. ‘முதுமையடைந்தவன் இவன் ஒருவன் தானா? அல்லது மற்றவர்களுக்கும் இதே கதி உண்டாகுமா? இவனைப்போல நெடுநாள் வாழ்ந்தால், நானும் இதே தோற்றத்தை அடைவேனே? மூப்பினால் யதோதரைக்கும் நரையும் திரையும் ஏற்படுமோ? மற்றவர்களுக்கும் முதுமை உண்டாகுமோ?’ என்று கேட்டார்.

சாரதி மறுமொழி கூறினான் : ‘ஆம், இளவரசே! பிறவியெடுத்த அனைவருக்கும் முதுமை உண்டு. இளவரசருக்கும் இந்த நிலை ஏற்படுவது இயல்பு. உருவம் மாறும்; இளமைத் தோற்றம் மறைந்து ஒரு சமயம் முதுமை ஏற்படுவதே இயற்கை. மக்கள் யாவருக்கும் இது பொதுவான விதி!’

இதைக் கேட்டதும், சித்தார்த்தரின் சித்தம் சோகத் தால் கலங்கிவிட்டது. நீண்ட பெருமூச்சு விட்டு அவர் தலையை அசைத்துக்கொண்டே, அந்த வயோதிகனையும், அவனைச் சுற்றி ஆரவாரம் செய்து கொண்டிருந்த ஜனங்களையும் பார்த்த வண்ணம் பேசலானார்; ‘முதுமை எல்லோரையுமே அடித்துத் தள்ளிவிடுகின்றது! நமது அழகு, நினைவு, வீரம் எல்லாவற்றையும் தொலைத்து விடுகின்றது! இதை அறிந்த பின்னும் உலகம் கவலையின்றிக் காலங்கழித்து வருகின்றதே!–தனக்கு ஏற்படப் போகும் கதி கண் முன்பு தெரிந்து கொண்டிருந்தும் அது சலனமடையவில்லையே!”

பிறகு அவர் பாகனை விளித்து, ‘முதுமையைப் பற்றிய சிந்னைகள் என் உள்ளத்தில் குமுறிக் கொண்டிருக்கையில், நாம் சோலையிலே சென்று என்ன காட்சியைக்