பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று காட்சிகள் ⚫ 63

யாளாக நடித்தான். காவலர் எவரும் அவர்களை இனம் கண்டு கொள்ள முடியவில்லை. அதுபோலவே நகர மக்களும் அவர்கள் எவர்கள் என்பதை உணரவில்லை. எனவே சித்தார்த்தரும் சாரதியும் பல வீதிகளின் வழியாகச் சென்று, வர்த்தகர்கள், தொழிலாளர்கள், மாணவ மாணவிகள், ஆசிரியர்கள், படைவீரர்கள், தண்ணீர் கொண்டு செல்லும் பெண்கள் முதலிய பலதிறப்பட்ட மக்களையும் நிதானமாகச் சந்தித்துப் பார்க்க முடிந்தது. கடைத் தெருக்கள், பள்ளிகள், ஆலயங்கள், தொழில் நிலை யங்கள் முதலியவையெல்லாம் சித்தார்த்தருக்குப் புதுமை களாகவேயிருந்தன. எங்கணும் மக்கள் வெள்ளம், எல்லோரும் ஏதேதோ வேலைகளின் மேல் சென்று கொண்டிருந்தனர். காட்சிகள் அனைத்தையும் பார்த்தவண்ணம் சித்தார்த்தரும், சாரதியும் உரோகிணி நதிக்குச் செல்லும் சாலைப் பக்கமாகத் திரும்பிச் சென்றனர்.

அந்தச் சாலையில் திரும்பியதும், தேவர்களின் சூழ்ச்சியால் நோயாளி ஒருவன் அவர்கள் முன்பு தோன்றினான். மெலிந்து, நலிந்து, வயிறு வீங்கியிருந்த அந்த நோயாளி தரைமீது தத்தளித்துக் கொண்டிருந்தான். அருகேயிருந்த புற்களைப் பற்றிக் கொண்டு அவன் எழுந்திருக்க முயன்றான். ஆனால் முடியவில்லை. ‘அம்மா, அப்பா...யாரேனும் உதவமாட்டீர்களா?’ என்று வேதனை தாங்காமல் அவன் மெல்லக் கூவினான். சித்தார்த்தர் ஓடிச் சென்று, அவன் தலையை மெதுவாகத் தூக்கித் தனது மடிமீது வைத்துக் கொண்டு, ‘உனக்கு என்ன செய்கிறது, சகோதரா? நீ ஏன் எழுந்திருக்க முடியவில்லை ?’ என்று கேட்டார். பாகனைப் பார்த்து, ‘சந்தகா! இவன் உடலெல்லாம் நடுங்குகின்றது. வாய் பேச முடியவில்லை. கைகளும் கால்களும் காய்ந்த குச்சிகளைப் போலத் தொங்குகின்றன. உடலே வெறும் எலும்புக் கூடாக இருக்கிறதே! இவன் யார்?’ என்று கேட்டார்.