பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

64 ⚫ போதி மாதவன்

‘இவன் நோயாளி. ஏதோ ஒரு கொடிய நோய் இவனைப் பற்றிக் கொண்டிருக்கிறது. இவன் அங்கங்களெல்லாம் தளர்ந்து போய் விட்டன. இவன் சாக வேண்டியவன். ஆனால் படவேண்டிய வேதனை எஞ்சியிருப்பதால், குறையையும் அனுபவிப்பதற்காகவே உயிரோடு இருக்கிறான். கோமகனே! தாங்கள் இவனைத் தீண்டுதலும் ஆகாது. இவனது நோய் தங்களையும் பற்றிக்கொள்ளும்!’ என்று கூறினான் சந்தகன்.

‘இந்த நோய் இவனுக்கு மட்டும் ஏற்பட்டதா? இல்லையெனில், எல்லோருக்கும் இது இயற்கையா?’

‘மனிதர் யாவர்க்கும் நோய் பொதுவானது; அது பல உருவங்களில் தோன்றும். உடல் படைத்தவர் எல்லோரும், எந்த இடத்திலும், இதை எதிர்பார்க்கவேண்டியது தான்!’

‘நோய் வருவது முன்னதாக நமக்குத் தெரியாதா?’

‘தெரியாது. இளவரசே! மறைந்திருந்து கொத்தும் நாகம் போன்றது நோய். இடி, எவர்களை விட்டுவிட்டு, எவர்கள் தலைகளில் விழும் என்பதை யாரேனும் அறிந்து கூற முடியுமா?’

‘அப்படியானால் எல்லா மக்களும் நோய்களுக்கு அஞ்சியே வாழ்ந்து கொண்டிருக்கின்றனரா?’

‘ஆம், அரசே!’

‘இந்தத் துயரங்களையெல்லாம் பார்த்த பின்னும் மனித சமூகம் அமைதியாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறது. நோயின் கொடூரங்களிலிருந்து கூடத் தப்ப முடியாத மனிதர்கள் புன்னகையோடு திரிவதைக் கவனித்தால், அவர்களுடைய அறிவே சிதறிப் போய்விட்டதாகத் தோன்றுகிறது!’