பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று காட்சிகள் ⚫ 67

களில் தேர்ந்த கட்டழகிகள் பலருடன், சித்தார்த்தரின் வரவை எதிர்பார்த்துக் காத்திருந்தான். இளவரசர் அங்கு வந்தவுடன் இசையும் நடனமும் ஆரம்பமாயின. சிறிது நேரத்திற்குப் பின் மாதர்கள் கூட்டங் கூட்டமாக அவரைச் சூழ்ந்து மொய்த்துக் தொண்டனர். ஆனால், வழக்கமாக அவர்கள் பார்த்திருந்த இளவரசர் அன்று இல்லை. மாநிலத்தின் சோகத்தை யெல்லாம் தமமி மதிமுகத்தில் தேக்கிக் கொண்டு, ஒரே சிந்தனையில் ஆழ்ந்து நின்றார் சித்தார்த்தர். கை வளையல்களின் ஒலியோ, கால் சிலம்புகளின் சதங்கை ஒலியோ, கிள்ளைகள் போல் கொஞ்சும் சுந்தரிகளின் குரலோ அவரைக் கவர முடியவில்லை.

‘மூப்பு, பிணி, சாக்காடு! உலகத்தின் துயரம் கடலை விடப் பெரிது! கடலைவிட ஆழமானது! ஒரே துன்ப வெள்ளம்! துக்கத்திற்கும் மரணத்திற்கும் பாலம் அமைத்தது போலவே வாழ்க்கை விளங்குகின்றது! இன்பங்கள் எல்லாம் துன்பங்களிலேயே முடிகின்றன. மோகம் ஊட்டும் இளமை முதுமையிலே முடிகின்றது; காதலெல்லாம் பிரிவிலேயே முடிகின்றது; வாழ்க்கை வெறுக்கத் தகுந்த மரணத்திலேயே முடிகின்றது! இந்த ஏமாற்றத்திலேயே நானும் இவ்வளவு காலமாக ஆழ்ந்திருந்து விட்டேன்! இதோ என் கண்களை மறைத்திருந்த திரை கிழிந்து வீழ்ந்து விட்டது. எனக்கும், என்னைப் போன்ற சடல மெடுத்த சகவருக்கும் உதவியாக நான் உண்மையை உணர்ந்து கொள்வேன்! தெய்வங்களை நினைத்து இரங்கி ஏங்குவதில் பயனில்லை. பிரமனே இவ்வுலகைப் படைத்தான் எனில், இதை ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்த்தி வைக்க வேண்டும்?'–இவ்வாறு சிந்தனையில் ஆழ்ந்திருந்த சித்தார்த்தரின் கண்கள் அன்றலர்ந்த தாமரை மலர்களைப் போன்ற ஆயிழையர் முகங்களை ஏறிட்டுப் பார்க்க மறுத்தன.