பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

தேகவியோகமானார். அதன் பின்பு மௌத்கல்யாயனர் புறச்சமயிகளின் சூழ்ச்சியால் கொலையுண்டு இறந்தார். இவர்கள் பெருமானின் வலக்கரமாகவும், இடக்கரமாகவும் இருந்து பணியாற்றி வந்த மேதாவிகள். இவர்களுடைய அஸ்திகள் பிற்காலத்தில் சாஞ்சி ஸ்தூபம் ஒன்றில் புதைக்கப் பெற்றிருந்தன. ஒருகால் இந்திய அரசாங்கத்தின் புதைபொருள் ஆராய்ச்சித் தலைமையதிகாரியாயிருந்த தளபதி கன்னிங்ஹாம் 1850-ஆம் ஆண்டு அவைகளைக் கண்டெடுத்து, லண்டனிலுள்ள விக்டோரியா ஆல்பர்ட் கண்காட்சிச் சாலைக்கு அனுப்பி வைத்தார். இந்திய நாடு விடுதலை பெற்றபின், தேடுதற்கரிய அச்செல்வங்கள் திரும்பக் கிடைத்தன.

அவைகளை அடக்கம் செய்து வைப்பதற்காக இரண்டு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட செலவில் இந்திய மகாபோதி சங்கத்தார் சாஞ்சியிலேயே புதிதாக ஒரு விகாரை அமைத்திருந்தார்கள். சாஞ்சிக் குன்றில் பழைய விகாரைக்கு அருகிலேயே இது அழகுற அமைந்துள்ளது.

நவம்பர் 30ல் ஐம்பதினாயிரத்திற்கு மேற்பட்ட மக்ககரின் பெருங்கூட்டத்தோடு அஸ்திகள் அடங்கிய தங்கப் பேழை ஊர்வலமாக எடுத்துவரப் பெற்றது. மணிகள் முழங்கவும், மந்திர கீதங்கள் ஒலிக்கவும், பிக்குக்களும், பிக்குணிகளும் தரையில் விழுந்து வணங்கவும், மக்களனைவரும் பணிந்து போற்றிப் பரவசமாக நிற்கவும், இந்திய மகாபோதி சங்கத்தின் தருமகர்த்தா புனித பிக்கு ஸ்ரீனிவாச நாயகத்தேரரும், இலங்கை மகாபோதி சங்கத் தலைவர் புனித பிக்கு டாக்டர் பி. வஜிராணண மகாதேரரும் அஸ்திகளை இந்தியப் பிரதம மந்திரி திரு. பண்டித நேரு அவர்களிடமிருந்து பெற்று விகாரையுள் அடக்கம் செய்தனர். புத்த கயையிலிருந்தும், அனுராதபுரத்திலிருந்தும் வந்திருந்த இரண்டு அரசிளங் கன்றுகளும் நடப்பெற்றன.