பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

68 ⚫ போதி மாதவன்

‘சொற்பல பேசித் துதித்து நீங்கள் நச்சிச் செல்லும் நரகவாயில்’ என்றோ , ‘காதள வோடிய கலகப் பாதகக் கண்ணியர்’ என்றோ அவர் அம்மங்கையரை வெறுத்துரைக்கவில்லை. ‘மறலி விட்ட தூதுவர்’ என்றும், கருவிளை கழனிகள் என்றும், ‘காமப் பாழிகள்’ என்றும் பொதுவாகத் துறவிகள் பெண்களைப் பழிப்பது போல் அவர் பழிக்கவில்லை ஆனால் அப்பெண்கள் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையேயில்லாமல், அறியாமையில் ஆழ்ந்திருப்பதைப் பற்றியே எண்ணிப் பரிதாபப்பட்டார். இந்தப் பெண்கள் அனைவரும் இளமை நீங்கி விரைவிலே முதுமையடையப் போகின்றார்கள்; நோயும், மரணமும் இவர்களை எதிர்பார்த்துக் காத்து நிற்கின்றன; இந்த உண்மையைக் கூட உணராமல் இவர்கள் சிரித்து விளை யாட எப்படி முடிகின்றது? முதுமை, பிணி, மரணம் மூன்றையும் பார்த்த ஒருவர், பின்னால் அமைதியாக நிற்கவோ, அமரவோ, துயிலவோ முடியாதே! ஆனால், இவர்கள் கேளிக்கைகளிலே ஈடுபட்டு எப்படிச் சிரிக்கிறார்கள்?’ என்று அவர் தமக்குள்ளேயே கேட்டுக் கொண்டார்.

அவருடைய சோகத்தைக் கண்டறிந்த உதாயி அருகே வந்து பல தேறுதல் மொழிகள் கூறினான். இளமை இன்பத்திற்காகவே ஏற்பட்ட பருவம் என்றும், காதல் மிகுதியால் களித்து வந்து அபயம் கேட்கும் அபலைகளை உதறித் தள்ளுதல் மரியாதையன்று என்றும், தான் கட்டி வைத்திருந்த நீதிகளையெல்லாம் அவர் முன்பு விரித்துரைத்தான்.

சித்தார்த்தர் பொறுமையோடு அவன் சொற்பொழிவைக் கேட்டு விட்டு, ‘நான் உலகப் பொருள்களில் எதையும் உதறித் தள்ளவில்லை. மனித குலம் முழுதும் அவைகளோடு தொடர்பு கொண்டிருக்கின்றது. ஆயினும் இந்த நெடிய உலகிலே எதுவும் நிலையில்லை. நிலையாமை