பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

70 ⚫ போதி மாதவன்

அவர் கூறிய பெயரே பின்னால் அக்குமாரனுக்கு நிலைத்து விட்டது.

இரவு முழுதும் இளவரசர் உறக்கம் கொள்ள வில்லை. உடலைப் பற்றியோ, வாழ்க்கையைப் பற்றியோ, கருத்கில்லாமல் காலங்கழித்து வரும் கோடிக்கணக்கான மக்களைப் பற்றி அவர் சிந்தித்துக் கொண்டேயிருந்தார்.

நூறு ஆண்டுகள் மனிதன் உலகில் வாழ்ந்தாலும், அவற்றில் பாதி உறக்கத்திலே கழிகின்றது. பதினைந்து ஆண்டுகள் பாலப் பருவத்தில் பறந்தோடுகின்றன. எஞ்சிய நாட்களிலும் பிணி, பசி, மூப்பு, துன்பம்- இது கான் வாழ்க்கையா? தாள்களில் அணிந்த சிலம்பகள் ஆர்க்கும்படி தவழ்ந்து திரியும் குழந்தைகள் கடைசியில்


‘சொல் தளர்ந்து, கோல் ஊன்றிச்
சோர்ந்த நடையினராய்ப்
பல் கழன்று பண்டம் பழிகாறும்’[1]

நிலைக்கு வந்து விடுகின்றனர். நெடுமரம்போல ஆறடி உயரம் நிமிர்ந்து வளர்ந்த மனிதர்கள், முதுகு வளைந்து கூனிக்குறுகி, உடல் தளர்ந்து, தலை நடுங்கி, தண்டு ஊன்றி விழுந்து இறக்கின்றனர்.

உடல் கல்வினும் வலிதாக என்றும் நிலைத்திருப்பது போல எண்ணித் திரிகின்றனர் மக்கள். ஆனால் உடலின் உண்மையான தன்மை என்ன? அது ‘மரணப் பஞ்சரம்';[2]


    பிறந்ததால் அப்பெயர் அமைந்ததாகவும் வேறு சிலர் கூறுவர்.

  1. நாலடியார்
  2. பஞ்சரம்-கூடு