பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

மூன்று காட்சிகள் ⚫ 71

காற்றிற் பறக்கும் கானப் பட்டம்; ‘காமக் கனலிலே கருகிடும் சருகு’[1], பாவக்கொடி பற்றிக்கொண்டு வளர்வதற்கு ஏற்ற கொழுகொம்பாக அது விளங்குகின்றது. தோன்றியதிலிருந்து அழியும் வரை அதன் கவலை புலராக் கவலையாகவே உளது.

இந்த உடலில் தோன்றும் நோய்கள் எத்தனை! தோலில் ஒரு துளி கிழிந்து விட்டாலும், அந்தப் புண்ணை ஆற்றுவதற்கு என்ன பாடுபட வேண்டியிருக்கிறது?

‘ஈச்சிற கன்னதோர் தோல் அறினும் வேண்டுமே
காக்கை கடிவதோர் கோல்.’

ஆற்றங்கரையிலுள்ள மரம் போன்றது உடல். எப்போதும் அலையடித்து அதன் வேரிலுள்ள மண்ணை நாள் தோறும் கரைத்துக் கொண்டேயிருக்கின்றது.

வாழ்க்கை நிலைப்பதில்லை. ‘புல் நுனிமேல் நீர்போல் நிலையாமை’. மணப்பறையைக் கேட்டுக் கொண்டிருக்கும் போது, அதுவே பிணப்பறையாக மாறிவிடுகின்றது. தந்தை, தாய், தாரம், தமர், மக்கள் எல்லோரும் சந்தையிலே கூடியுள்ள கூட்டம் எவரும் உயிரைப் பிரியாமல் பிடித்து வைத்துக்கொள்ள முடியாது.

‘நின்றான், இருந்தான், கிடந்தான், தன்
கேள் அலறச் சென்றான்...’

என்பதே மனிதனின் சரித்திரம்! ஆகவே, ‘இருப்பது பொய், போவது மெய்’ என்ற உண்மை சித்தார்த்தரின் உள்ளத்தில் பசுமரத்திற் பதிந்த ஆணிபோல் நிலைத்து விட்டது. இன்பம் துன்பத்திலும், அன்பு பிரிவிலும்,


  1. நாலடியார்