பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஐந்தாம் இயல்

நகர் நீங்கு படலம்

‘நீள்நில மீது நித்தியா னந்த
வாழ்வை அடையும் வழி இது என்று
தீவிர மான தியாகத் தாலும்,
ஓய்வில் லாத உழைப்பி னாலும்,
அறியலாம் என்னில் அறிந்து வருவேன் !
வாடி வருந்த மன்னுயிர் எல்லாம்
அடையும் துன்பம் அனைத்தும் ஒழிப்பேன் !’

--ஆசிய ஜோதி

சாக்கிய சிம்மமாகிய சித்தார்த்தர் ஐம்புலன்களின் இன்பத்தை அறவே வெறுத்திருந்தார். இதயத்திலே விடம் தோய்ந்த கொடிய அம்பு குத்தியிருக்கையில் சீரிய சிங்கம் எவ்வாறு துயருற்று அதே சிந்தனையிலிருக்குமோ, அதுபோலவே அவர் துடித்துக் கொண்டிருந்தார். மேலும் மேலும் அவருக்கு இன்பமளிப்பதற்காக மன்னர் செய்த முயற்சிகள் யாவும் பாழாயின. இனிய இசைகள் அவர் செவியில் ஏறவில்லை. அவர் கண்கள் நடனத்தை நாடவில்லை. மாதர்களின் மையல் விழிகள் அவரிடம் தம் வல்லமையை இழந்தன. கலைகளில் எதுவும் அவர் கருத்தை மாற்ற முடியவில்லை.

கடைசிக் காட்சி

அப்போது வசந்த காலம். மாம்பூக்களும் அசோக மலர்களும் எத்திசையிலும் நறுமணம் பரப்பிக் கொண்டிருந்தன. மரங்கள் எல்லாம் பழைய சருகுகளை உதிர்த்து

போ -5