பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76 ⚫ போதி மாதவன்

வரை வெறுத்து ஒதுக்குவது எனக்கு அழகாகுமா? அது நியாயமா?’ என்று எண்ணினார்.

‘பாவச் சரக்கொடு பவக்கடல் புக்குக்
காமக் காற்றெடுத் தலைப்பக்
கெடுவழிக் கரைசேர்க் கொடு மரக் கலத்தை’[1]

அவர் நன்கு தெரிந்து கொண்டார். மெல்லிய தோற் போர்வையுடன் விளங்கும் உடல் புண்கள் நிறைந்த கூடு; இதில் ஆயிரம் ஆயிரம் துவாரங்களிலிருந்து, திறந்த புண்ணில் நாற்றம் வீசுதல் போலத் துர்க்கந்தம் வந்து கொண்டேயிருக்கிறது.[2] இது

‘ஐவர் கலகமிட்(டு) அலைக்கும் கானகம்,
சலமலப் பேழை. இருவினைப் பெட்டகம் ![1]

இவ்வுடலோடு வாழ்தல் சிறை வாழ்வை ஒத்தது. சிறையில் அடைபட்டுத் துயரில் உழலுவோன் தன் விலங்குகளை உடைத்துக் கொண்டு தப்பிச் செல்லத் துடித்துக் கொண்டிருப்பான். அதே போலப் பிறவி தோறும் எல்லையற்ற துன்பம் நிறைந்த சிறையே மனிதனை எதிர்பார்த்துக் காத்திருக்கின்றது; விலங்குகளை உடைத்துக் கொண்டு தப்ப முயல்வதே அறிவுடைய செயலாகும். பிறவிக் கடலிலே வீழ்ந்தவனை ‘நான்’ என்னும் முதலை வாய் பிளந்து விழுங்க வருகின்றது; இரு வினைகள் என்னும் அலைகள் அவனை அங்குமிங்கும் அலைக்கின்றன. இந் நிலையில் அறிவு ஒன்றே அவனுக்குத் தெப்பமாக உதவும். அதையும் கைவிட்டு மதிமயங்கித் திரியும் மக்கள் நற்கதி அடைவது எங்ஙனம்?[3]


  1. 1.0 1.1 பட்டினத்தார்.
  2. ‘மிலிந்தன் பிரச்னைகள் (மிலிந்த பன்ஹா ).’
  3. தாயுமானவர்.