பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80 ⚫ போதி மாதவன்

மன்னரும் மைந்தரும்

அரண்மனையை அடைந்தவுடன், அவர் நேராக அரசரிடம் சென்றார். அவரை முறைப்படி வணங்கி, ‘மன்னர் மன்ன! பெருந்தன்மையோடு எனக்கு ஒரு வரம் அளிக்க வேண்டுகிறேன். நான் முக்தியை நாடித் துறவி வியாக விரும்புகிறேன். உலகில் எல்லாப் பொருள்களும் முடிவில் பிரிந்தே செல்கின்றன. பிரிவே எனக்கும் ஏற்பட்ட விதி. ஆதலால் நான். வனம் செல்வதற்கு அன்புடன் விடை தர வேண்டும்!’ என்று வேண்டினார்.

அம்மொழிகளைக் கேட்ட மன்னவர், யானையால் தாக்குண்ட மரம்போல், நிலை கொள்ளாது நடுங்கி ஆடி விட்டார். கண்களிலே நீர் வழிய, மைந்தரின் தாமரை போன்ற தடக்கைகளைப் பற்றிக் கொண்டு, அவர் மறு மொழி கூறலானார்: ‘என் அருமைக் குமர! இந்த எண்ணம் இப்போது வேண்டாம். துறவற வாழ்க்கைக்கு இது ஏற்ற பருவமன்று. இளமையிலே மனம் சலனப் பட்டுக் கொண்டிருக்கையில் துறவு வாழ்க்கை தவறாக முடியும் என்று பெரியோர் கூறுவர். உலகப் பொருள்களிலே ஆசையுற்ற புலன்களுடன், கருத்தில்லாத இளைஞன் தவத்திற்கேற்ற உறுதியின்றித் திரும்பி விடுவான். நற்பண்புகள் எல்லாம் நிறைந்த என் நாயகமே! எனக்குத்தான் வயதாகிவிட்டது! நாடாளும் பொறுப்பையும் சிறப்பையும் உன்னிடம் ஒப்படைத்து விட்டு, நான் தவம் புரியச் செல்கிறேன். மதிநலம் படைத்த நீ சிறந்த மன்னனாக விளங்குவாய் வீரமே உனது தருமம்; பெற்ற தந்தையைப் பிரிந்து செல்வது உனக்கு அறமன்று, அரச போகத்தில் ஆழ்ந்திருந்த நானே ஆரண்யம் செல்வேன். நீ உன் எண்ணத்தைக் கைவிட்டுவிடு!’

இனிமையான இசை எழுவது போன்ற குரலில் இளவரசர் பதிலுரைத்தார்: ‘அரசே! நான்கு விஷயங்-