பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நகர் நீங்கு படலம் ⚫ 89

விட்டு, வெளியே வானத்துத் தாரகைகளை நோக்கினார். நேரமாகிவிட்டது என்ற துடிப்புடன், முத்துச் சரங்களால் அலங்கரிக்கப் பெற்ற கட்டிலை வேகமாய்ச் சுற்றி வந்து வெளியேற முயன்றார். மூன்று முறை வெளியேறிய அரசர் பெருமகனார் மீண்டும் மீண்டும் அறைக்குள்ளேயே திரும்பி விட்டார். அவ்வளவு வலிமை பெற்றிருந்தது தேவியின் அந்தமில்லாத அழகு, ஐயனும் அவள்பால் அவ்வளவு அன்பு கொண்டிருந்தார்! அந்த நேரத்தில், பெற்ற தாயினும் உற்ற தாயாக விளங்கிய உத்தமி கௌதமி யையும், அல்லும் பகலும் கவலையுடன் தம்மை வளர்த்து வந்த தந்தையையும், தம்மிடம் தணவாக் காதல் கொண்டிருந்த நாட்டு மக்களையும் மனத்திலே நினைத்துக் கொண்டார். ‘என் பிரிவால் உங்களுக்கு உண்டாகும் சிறு துயரை நீங்கள் அனை வரும் பொறுத்தருள வேண்டும்; ஏனெனில் உங்களுக்காகவே நான் செல்கிறேன்!’ என்று கூறிக்கொண்டு அவர் அங்கிருந்து விரைவாக வெளியே வந்தார்.

வெளி மண்டபத்திலே துயின்று கொண்டிருந்த பெண்கள் பலரையும் மறுபடி பார்த்தார். பல்லாண்டு களாக அவருக்குப் பணி செய்வதையே பாக்கியமாகக் கொண்டிருந்தவர்கள் அவர்கள். அவர் மனத்தினால் அவர்களிடமும் விடைபெற்றுக் கொண்டார். இனிமை மிக்க தோழியரே! ‘இப்பொழுது மூச்சோடு உறங்குகின்றீர்கள். இதே போல, அழகும் இனிமையும் இழந்து, கடைசியில் மூச்சில்லாமலே நீங்கள் உறங்குவீர்கள் என்பதை எண்ணியே நான் பிரிகிறேன்! இப்போதே இந்த இடம் மயானம் போலவே தோன்றுகின்றது!’ என்று சொல்லிக் கொண்டு மெதுவாக அவ்விடத்தையும் விட்டு அகன்றார்.

சித்தார்த்தரின் உள்ளக் கருத்தை உணர்ந்த தேவர்கள் அரண்மனை வாயிற் கதவுகள் தாமாகவே திறந்து கொள்-

போ–6