பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94 ⚫ போதி மாதவன்

துன்பம் ஆகியவை எனக்கும் உரியவையாயிருக்கையில், அவைகளைப் பற்றி ஆராய்ந்து பார்த்துப் பிறப்பற்ற பேரின்பமாகிய நிர்வாணத்தை அடைவதற்கு நான் ஏன் முயற்சி செய்யக் கூடாது?” என்று நான் எண்ணினேன்.’

மேலும், சித்தார்த்தர் மிக்க இளமையிலேயே, சிறு வனாயிருக்கும்போதே, துறவு பூண்டதாயும் இந்நூலில் அவர் கூறியுள்ளார் ஆயினும் அவருக்கு இராகுலன் என்ற குழந்தை இருந்ததை எல்லா வரலாறுகளும் எடுத்துரைப்பதால், அவனுடைய தோற்றத்திற்குச் சிலநாள் முந்தியோ பிந்தியோதான் சித்தார்த்தர் துறவு பூண்டி ருக்க வேண்டும் என்பது உறுதியாகின்றது. ‘புத்த வமிசம்’ என்ற நூலில் புத்தரே கூறியதாகக் குறிக்கப் பெற்றிருக்கும் வாக்கியங்கள் இவை:

‘எனது நகரம் கபிலவாஸ்து. சுத்தோன மன்னர் என் தந்தையர். மாயாதேவி என் அன்னையர்.

‘இருபத்தொன்பது ஆண்டுகள் நான் இல்லத் தில் இருத்தேன். இராமம், சுராமம், சுபதம் என்னும் பெயருள்ள இணையற்ற மூன்று மாளிகைகள் எனக்கு இருந்தன.

‘ஆபரணங்களால் நன்கு அலங்கரிக்கப் பெற்ற நாற்பதாயிரம் மகளிர் எனக்குப் பணி விடை செய்து வந்தனர். பத்த கச்சனா (யசோதரை) எனது மனைவி. இராகுலன் எனது மகன்.

‘நான்கு விதமான நிமித்தங்களைக் கண்டு நான் குதிரை ஏறிப் புறப்பட்டுச் சென்றேன்...’