பக்கம்:போதி மாதவன்-புத்தர் வாழ்க்கை சரிதை.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஆறாம் இயல்

கௌதம பிக்கு

கறையற்ற பல்லும், கரித்துணி ஆடையும், கள்ளமின்றிப்
பொறையுற்ற நெஞ்சமும், பொல்லாத ஊணும் புறக்திண்னையும்
தரையில் கிடப்பும், இரந்(து) உண்ணும் ஓடும், சக(ம்) அறியக்
குறைவற்ற செல்வ(ம்) என் றேகோல மாமறை கூப்பிடுமே!’

- பட்டினத்தடிகள்

காலை இளம் பரிதி கீழ்த்திசையில் பல கோடிக் கதிர்களைப் பரப்பிக்கொண்டு உதயமாகும் நேரத்தில் கண்டகம் அநோம நதிக்கரையை அடைந்துவிட்டது. இரவில் எங்கும் நில்லாது சுமார் இருபது மைல் தூரம் ஒரே பாய்ச்சலாக ஓடிவந்துக் கொண்டிருந்த அக்குதிரை, அநோம நதிக்கரையில், பிருகு புத்திரரான பார்க்க முனிவரின் ஆசிரமத்திற்கருகே வந்ததும், களைத்து நின்று விட்டது. சித்தார்த்தர் தாம் அடைய வேண்டிய கானகம் அது தான் என்று கருதினார். குதிரை நின்ற இடத்திலேயே அவரும் சந்தகனும் கீழே இறங்கிவிட்டனர். இறங்கியதும், சித்தார்த்தர் குதிரையைத் தட்டிக் கொடுத்து, ‘உன்னால், எல்லாம் இனிதாக முடிந்தது!’ என்று அதை வாழ்த்தினார்.

சந்தகன் துயரம்

சந்தகனை அவர் மிகவும் புகழ்ந்தார். அவரிடம் அவனுக்கு நிறைந்த அன்பு இருந்ததோடு, அவர் நினைக்கும் காரியங்களை உடனுக்குடனே நிறைவேற்றிக்