பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-4-


இந்தக் கருத்தை நானாகப் படைத்துக்கொண்டு கற்பனையாகச் சொல்கிறேனா? இல்லை. இல்லவேயில்லை. இதற்கு எண்ணற்ற சான்றுகள் நம்நாட்டு இலக்கியங்களிலும் மக்களின் வாழ்க்கை நடைமுறையிலும் உண்டு.

புகழ்ச் சாவு

நம்நாட்டு முன்னோர்கள் தாய்நாட்டிற்காகப் போர்க் களத்தில் உயிர்விடுவதைப் பெரும்பேறாகக் கருதினர். போர்க்களத்தில் புண்ணேற்று முடியும் சாவே நல்ல சாவாக அன்று கருதப்பட்டது. மாறாக, வீட்டிலோ போர் அரங்கம் அல்லாத பிறவிடங்களிலோ நேரும் சாவு இழிவாகக் கருதப்பட்டது. ஒருவர் போரில் விழுப்புண் பட்டு இறவாமல் வேறிடத்தில் இறந்துபோவாராயின், கத்தியால் அவரது மார்பகத்தைக் கீறிப் பின்னரே அடக்கம் செய்வது பண்டை மரபாம். போரில் மார்பில் விழுப் புண் பட்டு அவர் இறந்ததாக இதற்குப் பொருளாம். போர்ச்சாவின் உயரிய புகழ்நிலை இதனால் புலனாகுமே!

நடுகல்

இதுமட்டுமா போரில் இறந்துபோன மறவனை அடக்கம் செய்த இடத்திற்குமேல் கல் நடுவார்களாம். அக்கல்லில், அம்மறவனது பெயர், அவன் ஆற்றிய அருஞ் செயல் முதலியன பொறிக்கப்பட்டிருக்குமாம். அக் கல்லினை மயிற் பீலி, மலர் மாலை முதலியவற்றால் ஒப்பனை செய்து மறக் கடவுளாக மதித்து மக்கள் வழிபாடாற்றுவார்களாம். இந்தக்கல் 'நடுகல்' என அழைக்கப்படுகிறது. இச்செய்திகளை,

"நடுகல் பீலி சூட்டி நாரரி
சிறுகலத் துகுப்பவும் கொள்வன் கொல்லோ"
"நிரையிவண் தந்து நடுகல் ஆகிய
வென்வேல் விடலை யின்மையிற் புலம்பி"