பக்கம்:போர் முயற்சியில் நமது பங்கு.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

-7-

நாட்டு மகளிர் எத்துணை மறவுணர்வு கொண்டிருந்தனர் என்பதை ஈண்டெடுத்து முழங்க வேண்டுமா? இதோ:-

'மகனைப் பெற்றுவளர்த்தல் எனது கடமை; அவனைச் சான்றோனாக்குதல் அவன் தந்தையின் கடமை; அவனுக்குப் படைக்கலங்கள் படைத்துத் தருதல் கொல்லனது கடமை, நன்னடை நல்குதல் அரசின் கடமை; பகைவரது போர்க்களத்துட் புக்குச் சுழன்று திரிந்து அவர்தம் யானைப் படைகளை வாளால் வெட்டிச் சாய்த்து வெற்றி கொண்டு வருதல் என் காளை மகனுக்குக் கடமையாகும்' என்று பொன் முடியார் என்னும் பெண் புலவர் புறப்பாட்டொன்றில் கொக்கரித்துள்ளார். இதோ பாடல் :-

"ஈன்று புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோ னாக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக் கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை நல்கல் வேந்தர்க்குக் கடனே
ஒளிறுவாள் அருஞ்சமம் முருக்கிக்
களிறெறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே"

காவற்பெண்டு என்னும் ஓர் அம்மையாரின் வீட்டிற்கு வேறொரு வீட்டுக்காரி சென்று தூணைப் பற்றி நின்றுகொண்டு, 'ஏ அம்மே! போர் முழக்கம் கேட்கும் இவ்வேளையில் உன் மகன் எங்கே போய்விட்டான்?' என்று வினவினாள். அதற்குக் காவற்பெண்டு, என்மகன் எங்கே போயிருக்கிறானோ, எனக்குத் தெரியாது. புலி புறப்பட்டுப்போன கற்குகையைப்போல, அவனைப் பெற்றளித்த வயிறு இதோ இருக்கிறது; இதற்கு அவன் கெட்ட பெயர் தேடித் தரமாட்டான். அவன் எந்த வேலையாய் எங்குச் சென்றிருப்பினும், போர்ச்செய்தி கேட்டதுமே, அங்கிருந்தபடியே நேராகப் போர்க்களம்