பக்கம்:பௌத்தமும் தமிழும்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தம் தமிழ் நாட்டில் வளாச்சிபெற்ற வரலாறு

கக

பௌத்தத் துறவிகள் மருத்துவம் பயின்று, தம்மிடம் வரும் பிணியாளருக்கு இலவசமாக மருந்து கொடுத்துத் தொண்டு செய்துவந்தார்கள். அன்றியும், தமது பள்ளிகளில் பாட சாலைகளை அமைத்துச் சிறுவர்களுக்குக் கல்வியையுங் கற்பித்துவந்தாரகள். பௌத்தருக்குரிய நன்னாட்களில் நாட்டு மக்களைத் தமது பள்ளிக்கு அழைத்து, மணல் பரப்பிய முற்றங்களில் அமரச்செய்து, திரிபிடகம், புத்தஜாதகக் கதைகள், புத்தசரித்திரம் முதலான நூல்களை ஓதிப் பொருள் சொல்லியும் மக்களுக்கு மதபோதனை செய்துவநதனர். மற்றும், குருடர், செவிடர், முடவர் முதலானவருக்கும், ஏழைகளுக்கும் உணவு கொடுத்து தவ அறச்சாலைகளை அரசர் செல்வந்தர் முதலானோர் உதவிபெற்று நிறுவினார்கள். இவ்வாறு நாட்டுமக்களுக்கு நலம் புரிந்துகொண்டே பௌத்தமதத்தின் கொள்கைகளையும் போதித்துவந்தபடியால், இந்த மதம் தமிழ் நாட்டிலும் நன்கு பரவி வளர்ந்தது.

இவையன்றியும், இந்த மதம் மேல்சாதி கீழசாதி என்று பிறப்பினால் உயர்வு தாழ்வு பாராட்டாதபடியினாலும், எக்குடியிற் பிறந்தோராயினும், அன்னவர் கல்வி அறிவுகளிற் சிறந்தோராய்த் தம் மதக்கொள்கைப்படி ஒழுகுவாராயின், அவரையும் தங்குருவாகக் கொள்ளும் விரிந்த மனப்பான்மை கொண்டிருந்தபடியினாலும், அக்காலத்தில் சாதிப்பாகுபாடற்றிருந்த தமிழர் இந்த மதத்தை மேற்கொண்டனர் என்றும் தோன்றுகின்றது. இச்செய்திகளெல்லாம் தமிழ் நூல்களிலும் பிற நூல்களிலும் ஆங்காங்கே காணப்படும் குறிப்புகளைக்கொண்டு அறியலாம். பௌத்தமதம் தமிழ் நாட்டில் செலவாக்குப் பெற்றிருந்த செய்தி, சிலப்பதிகாரம், மணிமேகலை, தேவாரம், நாலாயிரப்பிரபந்தம், பெரிய புராணம், நீலகேசி முதலிய நூல்களினால் அறியக்கிடக்கின்றது,