பக்கம்:பௌத்த தருமம்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

101


ரிஷிகளின் வாக்கைப் போலவே தோன்றும்படி அவ்வளவு ஒற்றுமையுள்ளதா யிருக்கும். அவா அல்லது ஆசையை ஒழித்தல், அகங்கார மமகாரங்களாகிய ‘நான்’ ‘எனது’ என்ற பற்றுக்களை ஒழித்தல், பயன் கருதாமல் நிஷ்காமியமாகக் கடமைகளைச் செய்தல், அவித்தை என்ற பேதைமையை ஞானத்தால் அழித்து மெய்யறிவு பெறுதல், பொய், களவு, கொலை முதலிய தீவினைகளை விலக்கிச் சீலங்களைப் பேணித் தானங்களை மேற்கொள்ளல், கருமநியதியை ஒப்புக்கொள்ளல், உயர்ந்த ஞானத்தை அடைந்த பின் மோனநிலையில் அடங்கியிருத்தல் ஆகிய பல விஷயங்களில் வேதங்கள், உபநிடதங்கள், பகவத் கீதை முதலிய வைதிக நூல்களுக்கும் புத்தர் உபதேசங்களுக்கும் நெருங்கிய தொடர்பும் ஒற்றுமையும் இருக்கின்றன. ஆனால் ஆன்மா விஷயத்தில் நேர் முரணாக இருக்கின்றது.

வேத,உபநிடதங்கள் காமத்தைக் கடிந்துள்ளன. ‘ஆரம்பத்தில் ஆசை – காமம் – இருந்தது; அதுவே உள்ளத்தின் முதல் விதை, ஞான முனிவர்கள் தங்கள் அறிவினால் வாழ்வின் பந்தத்தை வாழ்வற்ற நிலையிலிருந்து கண்டு கொண்டனர்’ என்று ‘இருக்கு வேதம்’ கூறுகின்றது. ‘உலகத்தைப் பந்தப் படுத்துவது ஆசையே, வேறு பந்தமில்லை’ என்று ‘தைத்திரீயப் பிராம்மணம்’ குறிப்பிடுகின்றது. காமம் எல்லையற் றிருப்பதால் அது கடல் என்றும் வேத வாக்கியங்கள் கூறும். அவை காமத்தை அக்கினி யென்றும் வருணிக்கின்றன. இதயத்தினுள்ளே புகுந்த காமங்கள் கைவிடப் பெறும் பொழுது, உடனே அநித்தியமானவன் நித்தியனாகிறான், (இந்த வாழ்க்கையில் ) இங்கேயே பிருமத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/106&oldid=1386861" இலிருந்து மீள்விக்கப்பட்டது