பக்கம்:பௌத்த தருமம்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படைக் கொள்கைகள்

115


புத்தர் தாம் கண்ட உண்மைகளைக் கூறி மக்களைத் தமது நேரிய வழிக்கு இழுக்கவேண்டியிருந்தது. “விணான விசாரங்களை விடுமின்! விடுமின்!” என்று அவர் போதிக்க வேண்டியது அவசியமாக இருந்தது.

வினைத்திட்ப மில்லாதவனைப் புத்தர் மதிப்பதில்லை. உறுதியற்றவன் ஒன்றுக்கும் உதவான். இடைவிடாத ஊக்கமும், கருத்தும் உள்ளவனே இலட்சியத்தை அடைய முடியும் என்று அவர் பலகாலும் கூறிவந்தார். அத்தகைய உபதேசம் செய்தவர், தமது மார்க்கத்திற்கு அப்பாலோ, இப்பாலோ, எங்கு எது இருந்தாலும். பொருட்படுத்தியிருக்க முடியாது. அவர் தம் உபதேசங்களைக் கூடச் சீடர்கள் அவருடைய பெருமையைக் கருதி ஏற்றுக்கொள்ளக் கூடாது என்றும், தங்கத்தை வெட்டியும், புடமிட்டும். உரைத்தும் பார்ப்பதுபோல் சோதனை செய்தே ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறிவந்தார். தவிர, அவர் தாம் நேராக அறிந்து அநுபவித்த விஷயங்களைத் தவிர வேறு எதையும் உபதேசிக்கவுமில்லை. பகுத்தறிவைக் கொண்டு பரிசீலனை செய்து பார்த்தபின்பே எதையும் ஏற்கும்படி சொல்லக்கூடியவர், காணமுடியாத, கருதமுடியாத, பிரபஞ்ச நிலைகளுக்கு மேற்போன விஷயங்களை வெறும் நம்பிக்கையைத் துணையாகக் கொண்டு ஏற்றுக்கொள்ளும்படி எப்படிச் சொல்ல முடியும்?

‘சொல்லும், ஆராய்ச்சி அறிவும் ஒரு விளக்கு – அதைக் கொண்டு, சொல்லையும் ஆராய்ச்சி அறிவையும் கடந்து அப்பாற் சென்று, அதுபவ உண்மையாகிய மார்க்கத்தில் நடக்கவேண்டும்’ என்று ‘இலங்காவதார சூத்திரம்’ கூறுகின்றது. இதன் படியேதான் புத்தர் உபதேசித்து வந்திருக்கிறார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/120&oldid=1386887" இலிருந்து மீள்விக்கப்பட்டது