பக்கம்:பௌத்த தருமம்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிருவாணம்

139



முப்பத்தைந்தாவது வயதிலேயே அதை அடைந்திருப்பினும், ஒவ்வொருவரும் தாமாக அநுபவித்துத் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அதை முழுதும் விளக்காமல் விட்டுவிட்டார். அது அத்தகைய ஆழமுள்ளதுதான்.

நிருவாணம் சூனிய நிலையா?

நிருவாணமடைதலுக்கு உபமானமாக எண்ணெய் விளக்கையும், விறகு தீர்ந்துபோன தீயையும் மேலே குறிப்பிட்டிருப்பதை ஓரளவுதான் உபமானமாகக் கருதலாம். ஏனென்றால், மேற்கூறிய இரண்டிலும், எண்ணெயும் விறகும் தீர்ந்தபிறகு, சுடரும் தீயும் அணைந்துபோய், எதுவும் மிஞ்சுவதில்லை. இவைகளைப் போலவே, நிருவாணம் என்பது சூனிய நிலை என்றும், மரணத்தோடு மனிதன் கதை முடிந்ததுதான் என்றும் சிலர் கூறிவந்தனர். எது நிருவாணம் என்பது பற்றியும் முன்னால் பல வாதங்களும் நடைபெற்றன. ஆனால், இக்காலத்தில், பாலி மொழியிலுள்ள பல நூல்கள் பிறமொழிகளிலும் வெளிவந்திருப்பதால், ஓரளவு அதைப்பற்றி நாம் தெளிவாக அறிந்துகொள்ள முடிகின்றது. எது எவ்வாறிருப்பினும், நிருவாணம் வெறும் சூனிய நிலை அன்று என்பதும், ஓயாமல் கணந்தோறும் சம்பவங்களின் பிரவாகமாக மாறிக்கொண்டேயிருக்கும் உலகத்திற்கு அது நேர்மாறான நிலையான சாந்தி நிலையம் என்பதும் தெளிவாகியுள்ளது.

நிருவாணம் செயலும், சிந்தனைகளும் அறவே ஒடுங்கிய நிலையன்று. அவ்வாறிருந்தால், உடலோடு இருக்கும் போதே அதைப் பெறுதல் இயலாது போகும். புத்தர் நிருவாணப் பேறு பெற்றபின் நாற்பத்தைந்து ஆண்டுகள் வாழ்ந்திருந்த பிறகே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/146&oldid=1386750" இலிருந்து மீள்விக்கப்பட்டது