பக்கம்:பௌத்த தருமம்.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிருவாணம்

141



பிறத்தல் ஆகிய எந்நிலையுமற்றது என்றும் நான் கூறுகின்றேன். அதற்கு நிலையுமில்லை, சலனமுமில்லை, ஆதரவுமில்லை. அதுவே துக்கத்தின் முடிவு."

உடலோடு இருக்கும்போதே நிருவாணம் அடைந்திருத்தலை 'ஸோபாதிஸேஸ' என்றும், அருகத்துக்களும், புத்தர்களும் பூத உடலை நீத்த பிறகு அநுபவிக்கும் நிருவாண நிலையை 'அநுபாதிஸேஸ' என்றும் பௌத்த நூல்கள் கூறும்.

இனி நிருவாணத்தைப் பற்றிப் புத்தர் பெருமான் ஆங்காங்கே கூறியுள்ள சில குறிப்புக்களைப் பார்ப்போம். சின்னஞ் சிறு உபமானக் கதைகளைக் கூறி அவைகளின் மூலமாகவும் அவர் உபதேசித்துள்ளார்.

உடல் ஓர் நகரம்

எல்லைப்பறத்திலே கோட்டை கொத்தளங்களோடு விளங்கும் ஒரு நகரம், கோட்டையில் ஆறு வாயில்கள் இருக்கின்றன. வாயில்களைக் காவல் புரிய அறிவாளியான ஒரு சேனாதிபதி அமர்ந்திருக்கிறான். நண்பர்களை உள்ளே புக அனுமதிப்பதும், பகைவர்களைப் புகவிடாமல் விரட்டுவதும் அவன் தொழிலாக அமைந்திருக்கிறது. கீழ்த் திசையிலிருந்து இரண்டு தூதர்கள் வேகமாக வந்து, 'அன்பா, இந்நகரின் அதிபதி எங்கே யிருக்கிறார்?' என்று கேட்கின்றனர். சேனாதிபதி, 'நான்கு சாலைகள் ஒன்றுகூடும் இடத்தில் அதோ அவர் அமர்ந்திருக்கிறார்!' என்று பதில் கூறுகிறான்.


  • 'உதானம்': இந்த மேற்கோள் இதற்கு முந்திய மூன்றாம் இயலிலும் குறிக்கப் பெற்றுள்ளது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/148&oldid=1386776" இலிருந்து மீள்விக்கப்பட்டது