பக்கம்:பௌத்த தருமம்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிருவாணம்

148



என்ற ஒருவகைப் பறவையைக் கொண்டுசெல்வது வழக்கம். கடலில் வெகு தூரம் சென்று, நிலமே கண்ணுக்குப் புலப்படாத நிலையில் அவர்கள் அந்தப் பறவையை அவிழ்த்து வெளியே விட்டுவிடுவார்கள். அது பறந்து சென்று, எங்காவது அருகே நிலம் தென்பட்டால், அந்த இடத்திற்குப் போய்விடும், நிலமே இல்லையானால், அது மீண்டும் கப்பலை வந்தடையும்.

அந்தப் பறவை நெடுந்தூரம் பறந்தும் நிலத்தைக் காணாமல் திரும்பக் கப்பலுக்கே வருதல்போல், புத்தருடைய சீடன், தான் தெரிந்துகொள்ள முடியாத அரிய விஷயங்களைப்பற்றி எவ்வளவு தூரம் ஆராய்ந்தும் பயனில்லாமல், பெருமானிடமே திரும்பிச்சென்று கேட்கிறான். அத்தகைய விஷயங்களில் ஒன்று, நீர், நிலம், நெருப்பு, ஜடப்பொருள், மனம், உடல் முதலிய எதுவும் இல்லாத இடம் எது என்பது.

அதற்குப் பகவர் அளித்த பதில் வருமாறு : '(நிருவாணத்தைப்பற்றி அருகத்து பெற்றுள்ள) விஞ்ஞானம் என்ற கட்புலனாகாத, எல்லையற்ற அறிவு நிலையே அது, எந்தத் திசையிலிருந்தும் சென்று கரையேறக்கூடிய நிலையே அது.'

சாதாரண விஞ்ஞானம் என்பது நான்கு கந்தங்களில் ஒன்று; அது அழிவுறக் கூடியது. ஆகவே இங்கே பகவர் குறித்துள்ள விஞ்ஞானம் அதற்கு மேம்பட்ட ஒன்று என்று கொள்ளவேண்டும். மன உணர்ச்சியும் அற்றுப்போன நிலையில் எஞ்சி நிற்கக் கூடியதாக அதைக் கொள்ளவேண்டும். அந்த நிலை தான் நிலம், நீர் முதலிய பூதங்களும், மனம், உடல் முதலியவைகளும் இல்லாத மேலான நிலை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/150&oldid=1386780" இலிருந்து மீள்விக்கப்பட்டது