பக்கம்:பௌத்த தருமம்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

பெளத்த தருமம்



பட்டுப் போயிற்று. இன்றுவரை கோடிக்கணக்கான மக்கள், சமயம் என்பது என்ன என்பதையும், இந் நாட்டில் தோன்றிய பல சமயங்களின் பண்பாடுகள் எவை என்பதையும், சமய நூல்கள் பலவற்றில் மக்களிடையே ஏற்றத் தாழ்வுகள் இருத்தலாகாது என்ற கொள்கை வலியுறுத்தப்பெற்றிருக்கிறது என்பதையும் உணர்ந்துகொள்ள முடியாமற் போய் விட்டது. இத்தகைய நிலையை ஆரம்பத்திலேயே எதிர்த்து நின்ற பெருமை பௌத்த தருமத்தைச் சேர்ந்ததே.

புத்தர் பெருமானுக்குப் பின்னால், ஐந்து, ஆறு நூற்றாண்டுகளுக்குப் பின்னும், பௌத்த தருமத்தைச் சேர்ந்த ஆசிரியர்கள் சாதிப் பிரிவினையையும், பிராமணர்கள் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று கருதிச் செருக்குடன் இருந்ததையும் கண்டித்துப் பிரசாரம் செய்து வந்தார்கள் என்று தெரிகின்றது. இத்தகைய பிரசாரத்திற்காக எழுந்த நூல்களுள் 'வஜ்ரசூசி' என்பது ஒன்று. இது அளவிலே சிறிது எனினும், சாதிகளைக் குத்தித் தாக்குவதில், இதன் பெயருக்கு ஏற்ப வயிர ஊசியாகவேயுள்ளது. 'புத்த சரிதை'யை இயற்றிய ஆசிரியர் அசுவகோஷரே இதன் ஆசிரியர் என்று சொல்லப்படுகிறது.

பிராமணீயம் என்பது ஜீவனில் இருக்கிறதா, உடலில் இருக்கிறதா, பரம்பரையில் இருக்கிறதா, படிப்பில் இருக்கிறதா, ஆசாரங்களில் இருக்கிறதா, கருமங்களில் (செய்கைகளில்) இருக்கிறதா, வேதங்களை அறிவதில் இருக்கிறதா என்ற வினாக்களை எழுப்பி, இவை அத்தனையிலும் அது இல்லை என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/163&oldid=1386817" இலிருந்து மீள்விக்கப்பட்டது