பக்கம்:பௌத்த தருமம்.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

158

பெளத்த தருமம்


ஷ கோசல நாட்டிலே ஐந்நூறு பிக்குகளுடன் புத்தர் யாத்திரை செய்கையில், செல்வம் மிகுந்த வேதியர் பலர் வசித்திருந்த மனஸாகதம் என்ற கிராமத்திற்கு அவர் விஜயம் செய்திருந்தார். அங்கே பாரத் துவாஜன் என்ற தோழனுடன் வசிட்டன் அவரிடம் சென்று தன் சந்தேகங்களை நீக்கியருள வேண்டினான். அப்போது அவனுக்கும் புத்தருக்கும் நிகழ்ந்த சம்பாஷணையில், அக்காலத்து வேதியர்கள் ஒழுக்கம் பேணாமல் வீண் பெருமை கொண்டு பேசி வந்ததைக் கண்டித்துப் பேணவேண்டிய ஒழுக்க முறைகளைப்பற்றிச் 'சுள்ள சீலம்', 'மஜ்ஜிம சீலம்', 'மகா சீலம்' என்ற மூன்று தலைப்புக்களில் புத்தர் பெருமான் விரிவாக எடுத்துரைத்தார். கருத்து நிறைந்த அந்த உரையாடலின் சுருக்கம் வருமாறு :

பிருமாவும் பிராமணரும்

வசிட்டன் - எல்லா வழிகளும் ஒரே ஊருக்குக் கொண்டு சேர்ப்பது போலச் சமயங்கள் யாவும் ஒரே முடிவுக்குத்தான் வழி காட்டுகின்றன அல்லவா?

புத்தர் - வசிட்ட, அவைகள் எல்லாம் சரியான இடத்திற்குத்தான் கொண்டு செல்கின்றன என்று நீ சொல்கிறாயா?

வசிட்டன் - ஆம், கௌதமரே!

புத்தர் - அப்படியானால், மூன்று வேதங்களயும் கற்றுத் தேர்ந்த பிராமணர்களிலே பிருமத்தை நேருக்கு நேராகக் கண்டவர் ஒருவராவது இருக்கின்றாரா?

வசிட்டன் - இல்லை!

புத்தர் - மூன்று வேதங்களையும் கற்றுத் தோந்த பிராமணர்களின் சீடர்களில் பிருமத்தை நேருக்கு நேராகக் கண்டவர் ஒருவராவது இருக்கின்றாரா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/165&oldid=1386825" இலிருந்து மீள்விக்கப்பட்டது