பக்கம்:பௌத்த தருமம்.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

186

பெளத்த தருமம்


உண்மை யென்னும் எண்ணத்தையும் (ஸத்காய திருஷ்டி), சந்தேகத்தையும் (வீசிகித்ஸை ), பயன் கருதிச் செய்யும் கிரியைகளான சடங்குகளையும் (சில விரதம்) கைவிட்டு மேலே வந்தவர்களை ஸ்ரோதா பன்னர் (ஸோதாபன்னர்) என்பர்; அதாவது ஆற்றைக் கடக்கும் நோக்கத்துடன் ஆற்றுள் இறங்கி விட்டவர்கள் என்று கருதப்படுவார்கள். அந்த நிலையிலே அவர்களுக்கு மேலும் ஏழு பிறப்புக்கள் உண்டென்று கூறப்படும். இதற்கு மேல் நிலையிலுள்ளவர்கள் ஸக்ருதாகாமிகள் (ஸகதாகாமிகள்) எனப்படுவர். அவர்களுக்கு மேலும் ஒரு பிறப்பு உண்டு. மூன்றாவதான உயர்ந்த நிலையிலுள்ளவர்கள் அநாகாமிகள். அவர்களுக்கு இனிமேல் பிறப்பில்லை. நான்காவது முடிவான மகோன்னத நிலையிலுள்ளவர்கள் அருகத்துகள் எனப்படுவர்; அவர்கள் பரிபூரணமான பயிற்சி பெற்று விளங்குபவர்கள். அவர்கள் இந்தப் பிறப்போடு நிருவாண நிலைக்கு உரியவர்கள்.

சங்கம் ஒவ்வொரு நாட்டிற்கும் ஒன்றாக இருந்து வருகின்றது. பௌத்த சங்கத்திலே சேர்ந்து வாழும் பிக்குகள், தமக்கு விருப்பமில்லை என்றால், எப்போது வேண்டுமானாலும் அதைவிட்டு விலகி, மீண்டும் இல்லறத்தை மேற்கொள்ளலாம். இதைப் போலவே பயிற்சிகளிலும் அவரவர் சொந்த விருப்பப்படிமுயற்சி செய்து கொள்ளலாம். ஆனால் ஒழுக்கத்தை மட்டும் யாவரும் உயிருக்கு மேலாகப் பாவித்து வரவேண்டும்.

‘ஒழுக்கத்தின் ஒல்கார் உரவோர்,

இழுக்கத்தின் ஏதம் படுபாக் கறிந்து.’



"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/193&oldid=1386819" இலிருந்து மீள்விக்கப்பட்டது