பக்கம்:பௌத்த தருமம்.pdf/194

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏழாம் இயல்

பௌத்தத் திருமுறைகள்

‘போதி நீழற்
சோதி பாதம்
காத லால்நின்(று)
ஓதல் நன்றே!’


புத்தர் பெருமான் பரி நிருவாணமடைந்த பிறகு மகா காசியபர், அநுருத்தர், ஆனந்தர், உபாலி முதலியோரும், மற்ற பிக்குகளும், மேற்கொண்டு பெருமானின் போதனைகளைப் பரிசுத்தமாகக் காப்பாற்றி வைத்திருப்பதுபற்றிக் கூடிப் பேசினார்கள். உபாலி, ததாகதருக்குப் பின்னால் அவர் அருளிய தருமமே ததாகதர் என்று கருதி, அதை மாசு படாமல் புனிதமாகப் போற்றி வரவேண்டும் என்று கூறினார். ‘புத்தர் பெருமானின் உபதேசங்களின் உட்பொருளைக் கைவிட்டுவிட்டு, அவருடைய தாதுக்களுக்காகத் தகோபாக்களை நிறுவுவதில் என்ன பயன் உண்டு ?’ என்றும் அவர் வினவினார். அநுருத்தர் எழுந்து நின்று, சத்தியமே உருவாகிவந்தவர் கௌதம சித்தார்த்தர் என்றும், அவர் தோன்று முன்பும் இந்த உலகிலே உண்மையிருந்து வந்தது என்றும், அவருக்குப் பின்னாலும் அது நிலைத்து நிற்கும் என்றும் அவரே கூறியுள்ளார் என்றும் பேசினார். ‘நாம் சத்தியத்திற்கு மரியாதை செய்வோம்; சத்தியத்தை ஆராய்ந்து எடுத்துக் கூறுவோம் ; சத்தியத்திற்குப் பணிந்து நடப்போம். ஏனெனில் சத்தியமே நமது குருநாதரும், தலைவரும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/194&oldid=1386821" இலிருந்து மீள்விக்கப்பட்டது