பக்கம்:பௌத்த தருமம்.pdf/218

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பௌத்தத் திருமுறைகள்

211


அபிதரும பிடகம்

சுத்த பிடகத்தில் கூறப்பெற்றுள்ள தருமத்திற்கு இது விளக்கமாக அமைந்திருக்கின்றது. இதில் தத்துவங்களும் கொள்கைகளும் மிக விரிவான முறையில் வெவ்வேறு தலைப்புக்களில் வகுக்கப் பெற்றுள்ளன. இதிலுள்ள வினா-விடைகள் மேலும் பொருள்களை விளக்குவனவாயுள்ளன.

தம்ம சங்காணி, விபங்கம், தாது கதை, புக்கல பண்ணத்தி, கதா வத்து, யமகம், பட்டானம் ஆகிய ஏழு பகுதிகள் அபிதரும் பிடகத்தில் இருக்கின்றன.

உடலுக்கும் மனத்திற்குமுள்ள சம்பந்தங்கள், மனோதரும இயல்புகள், குணத்தினால் மனிதர்களிடம் தோன்றும் வேறுபாடுகள், பிற்காலத்திலே தோன்றிய பௌத்தக் கொள்கைகளுக்கும், போலி வாதங்களுக்கும் பதில்கள் முதலிய பல விஷயங்கள் இதிலே இடம் பெற்றிருக்கின்றன. இதிலுள்ள முதற் பகுதியான ‘தம்ம சங்காணி’ ஒரு தரும சங்கிரகமேயாகும். இது மிகவும் புகழ் பெற்றுள்ள பகுதி.

வேறு பாலி நூல்கள்

பிற்காலத்தில் பாலி மொழியில் தோன்றிய பௌத்த நூல்கள் பலப் பல. அவைகளிலே மிகவும் பிரசித்தமானவை ‘மிலிந்த பந்ஹா’ என்ற மிலிந்தன் பிரச்னைகள், ‘விசுத்தி மக்கம்’ என்ற விசுத்தி மார்க்கம், ‘நெத்திப் பகரணம்’, ‘நிதான கதை’ முதலியவையும், பலவகை வியாக்கியானங்களுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/218&oldid=1386900" இலிருந்து மீள்விக்கப்பட்டது