பக்கம்:பௌத்த தருமம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

220

பெளத்த தருமம்




சிலரும், ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கில ஆசிரியர்களும், அமெரிக்க ஹார்வர்டு சர்வகலாசாலையைச் சேர்ந்த சில ஆசிரியர்களும் எழுதிய அரிய மொழிபெயர்ப்பு நூல்கள் அமெரிக்காவிலும் மேலை நாடுகளிலும் அதிகமாய்ப் பரவி அறிஞர்களை விழிப்படயச் செய்து விட்டன. அதனால் ஆராய்ச்சிகளும், வரலாறுகளும் ஏராளமாக வெளிவரலாயின. மக்கள் மனங்களும் பெளத்த தருமத்தில் ஈடுபட ஆரம்பித்தன. ஐரோப்பிய ஆசிரியர்களின் சலியாத உழைப்பையும், வெற்றிகளையும் கண்டுணர்ந்த நம் நாட்டு ஆசிரியர்களும் பெளத்த இலக்கியங்களிலே ஆர்வங்கொண்டு பணியாற்ற முன்வந்தனர். 1892-ல் கல்கத்தாவில் பெளத்த நூல் கழகம் ' (Buddhist Text Society) ஒன்று நிறுவப் பெற்றது. சரத்சந்திர தாஸ், டாக்டர் சதிஷ் சந்திர வித்யா பூஷண், தர்மானந்த கோசாம்பி, பி. எம். பருவா, LD மகா மகோபாத்யாய ஹர பிரசாத் சாஸ்திரி, மகாமகோபாத்யாய விதுசேகர் சாஸ்திரி, டாக்டர் பி. ஸி. லா, ராகுல் சாங்கிருத்யாயனர் முதலிய பலர் பல பெளத்த நூல்களைப் பதிப்பித்தும், மொழிபெயர்த்தும் வெளியிட்டனர். கல்கத்தா சருவகலாசாலையும், பூனா பெர்கூஸன் கல்லூரியும் இத்தொண்டில் பங்குகொண்டன. பம்பாயிலும், பரோடாவிலும் ஆராய்ச்சிகள் அதிகரித்தன. மொத்தத்தில் நாடு முழுதுமே ஒரு புத்துணர்ச்சி உண்டாகிவிட்டது.

இப்போது இந்திய அரசாங்கமே பெளத்தத் திருமுறைகளையும், பிற நூல்களையும் வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. இன்னும் சில ஆண்டுகளில் பல நாடுகளிலும் சிதறிக்கிடக்கும் முக்கியமான பெளத்த நூல்கள் ஏராளமாக வெளிவரக்கூடும்.


"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/227&oldid=1386771" இலிருந்து மீள்விக்கப்பட்டது