பக்கம்:பௌத்த தருமம்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நான்கு வாய்மைகள்

22


எனில், பிறவிக்குக் காரணம் எது என்பதை கண்டு கொண்டால், அதுவே துக்கத்திற்கு மூலகாரணமாகும்.

துக்க காரணம்

பிறவிக்குக் காரணமாயுள்ளது பேதைமை. அதனாலேயே பிறப்பும் இறப்பும் மாறி மாறி ஏற்பட்டுச் சம்சார[1] சக்கரம் சுழன்று கொண்டே இருக்கின்றது. பேதைமை காரணமாகச் செய்கைகள் ஏற்படுகின்றன. செய்கைகள் காரணமாக உணர்ச்சி தோன்றுகின்றது. உணர்ச்சியிலிருந்து உயிரும் உடலும் தோன்றுகின்றன. உயிரோடு இயங்கும் உடலில் ஆறு பொறிகள்[2] செயற்படுகின்றன. இவற்றின் மூலமே உடலுக்கு வெளியுலகத் தொடர்பு ஏற்படுகின்றது. இத் தொடர்பிலிருந்து ஏற்படும் உணர்ச்சிகள் அனைத்தும் நுகர்ச்சியாம். நுகர்ச்சியினால் அவா ஏற்படுகின்றது. அவாவிலிருந்து பற்று உண்டாகின்றது. பற்றுக் காரணமாகக் கருமத் தொகுதி ஏற்படுகின்றது. கருமத் தொகுதி அடுத்த பிறவிக்குக் காரணமாகின்றது. பிறப்பினால் பிணி, மூப்பு, சாக்காடு முதலிய வினைப் பயன்கள் மீண்டும் விளைகின்றன. இவ்வாறு ஒன்றோடொன்று தொடர்புடைய இத்தனை சார்புகளும் ‘பன்னிரண்டு நிதானங்கள்’ எனப்படும். இவைகளை மொத்த மாகப் ‘படிச்ச சமுப்பாதம்’ (சார்ந்து நின்று ஏக காலத்தில் தோன்றுவது) என்று குறிப்பிடுவதுண்டு.


  1. சம்சாரம் - பிறப்பும் இறப்பும்
  2. ஆறு பொறிகள் - ஐம் பொறிகளோடு மனத்தையும் சேர்த்து ஆறு பொறிகள்.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/26&oldid=1386775" இலிருந்து மீள்விக்கப்பட்டது