பக்கம்:பௌத்த தருமம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

பெளத்த தருமம்


பேதைமை அடியோடு அழிந்தால், செய்கை நின்றுவிடும்: செய்கை நின்றால், உணர்ச்சிக்கு இடமில்லை; உணர்ச்சியில்லாவிடில், அருவுரு (நாமமும் உருவமும்) இல்லை: அருவுரு இல்லாதபோது, வாயில்களும் இல்லை. வாயில்களாகிய புலன்கள் இல்லாமல் வெளியுலகத் தொடர்பான ஊறு இல்லாதொழிகின்றது: ஊறு ஒழிந்தால், நுகர்ச்சியில்லை. நுகர்ச்சி நீங்கியபின், வேட்கையில்லை. அதனால் பற்றும் ஒழிகின்றது. பற்று இல்லாத இடத்துக் கருமத் தொகுதி ஏற்பட இடமில்லை: கருமத் தொகுதி அற்றுப் போகையில், புதிய பிறப்பும் இல்லை. பிறப்பு ஒழிக்கப்பட்டால், மூப்பு, மரணம், துயரம், சோகம் முதலிய வினைப்பயன் இல்லாதொழிகின்றது. ஆகவே பரம்பரையாகத் தொடர்புடன் வரும் பிறவியை ஒழிப்பதற்கு முதற்கண் பேதைமையை அறிவால்-மெய்ஞ்ஞானத்தால்- ஒழிக்கவேண்டும். பின்னர் மற்றைச் சார்புகள் யாவும் முறையே ஒழிந்து விடுகின்றன.

மனிதன் எப்பொழுதுமே வாழ்வில் ஆசை கொண்டவன். உயிர்களிடத்தும் பொருள்களிடத்தும் அவனுக்குப் பற்று ஏற்படுகின்றது. அவன் மனம் இன்பத்தையே நாடுகின்றது. ஆயினும் அவனைச் சுற்றியிருககும் எல்லாப் பொருள்களும், உயிர்களும் ஓயாமல் மாறிக்கொண்டே வந்து அழிவடைவதையும் அவன் பார்த்துக்கொண்டேயிருக்கிறான். அவ்வாறிருப்பினும் தன் வாழ்வு மட்டும் நிலையானது -நித்தியமானது-என்று அவன் கருதுகிறான். உண்மையை உணரமுடியாதபடி பேதைமை அவன் கண்களை மறைக்கின்றது. வாழ்க்கை நிலையானது என்ற கருத்தில் அவன் தன் ஆசைகளைப் பெருக்கிக் கொண்டே செல்கிறான். தேவைப்பட்ட பொருள்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/29&oldid=1387108" இலிருந்து மீள்விக்கப்பட்டது