பக்கம்:பௌத்த தருமம்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முன்னுரை


புத்தர் பெருமான், ஆறு ஆண்டுகள் அருந்தவம் செய்து, தமது முப்பத்தைந்தாவது வயதில், கி.மு. 538, வைகாசிமீ, 6-ஆம் தேதி, புதன்கிழமை, 'மதிநாண் முற்றிய மங்கலத் திருநா'ளான பூர்ணிமையன்று, மெய்ஞ்ஞானமாகிய போதியடைந்தார். அவர் அமர்ந்திருந்த போதிமரத்தடியிலும், அருகிலும், ஏழு வாரங்கள் தங்கியிருந்துவிட்டு, அவர் காசி மாநகரை அடுத்திருந்த சாரநாத்தில் மான்சோலை என்னுமிடத்திற்குச் சென்றார். அங்கே தங்கியிருந்த கௌண்டின்யர், காசியபர், பாஷ்பர், அசுவஜித், பத்திரகர் என்ற ஐந்து தாபதர்களும் முன்னால் கௌதம புத்தரோடு உருவேலா வனத்தில் தவம் செய்து கொண்டிருந்தவர்கள். புத்தர் அவர்களைக் கண்டு, முதன் முதலாகத் தமது தருமத்தை அவர்களுக்கு உபதேசம் செய்தார். இதுதான் தரும சக்கரப் பிரவர்த்தனம் - பெருமான் பௌத்த தருமமாகிய அற ஆழியை உருட்ட ஆரம்பித்தமை, சுமார் 2,500 ஆண்டுகளாக அந்த ஆழி சுழன்றுகொண்டேயிருக்கின்றது.

ஊர் ஊராக நடந்துசென்று, நாடும் நகரும் நன்கறியும்படி, புத்தர் எண்பது வயதுவரை தமது தருமத்தை உபதேசித்து வந்தார். அதை ஏற்றுக்கொண்டு மக்கள் பௌத்த தரும உபாசகர்களாயினர்; அதன்படி வீட்டை விட்டு வெளியேறிய துறவிகள் சீவர உடையணிந்து, சீலம் மிக்க பிக்குகளாயினர்: பெண்களும் துறவு பூண்டு பிக்குணிகளாயினர். இவர்கள் அனைவரையும் கொண்டது தான் பௌத்த சங்கம்.

பௌத்தர்களுக்குப் புத்தர், தருமம், சங்கம் ஆகிய மூன்று சரணங்கள் உண்டு. பெருமானின் உபதேசங்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/5&oldid=1386472" இலிருந்து மீள்விக்கப்பட்டது