பக்கம்:பௌத்த தருமம்.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

பெளத்த தருமம்


கொண்டே, உளியிட்ட கற்களையும், புளியிட்ட செப்புச் சிலைகளையும் வணங்கும் பெருங் கூட்டமான மக்கள், தம் வாழ்க்கையைச் சீர்திருத்தாமல் வீணாக்குகிறார்கள்; பல நாடுகளிலும் பல மக்களினங்களிலும் துவேஷமும் குரோதமும் பெருகி வருகின்றன; மானிட வாழ்வின் இலட்சியம் மறக்கப்பெற்று, மந்திரங்களிலும், தந்திரங்களிலும், பூசனைகளிலும், ஆராதனைகளிலும் பொழுதெல்லாம் போக்கப்படுகின்றது. மனித சமுகம் முழுதும் ஒரே குலம் என்ற உண்மையும் தேய்ந்து மறைந்து ஒழிகின்றது. பொய்க் காட்சியால் உலகில் ஏற்பட்ட போர்கள், உயிர்ச் சேதங்கள், துயரங்களைப் போல, உலகிலே வேறு எதலுைம் ஏற்படவில்லை.

சத்தியம் தருமம் இரண்டும் மனித அறிவின் பரிணாமங்கள். ஆதலால் அவைகளைப்பற்றி முடிவு செய்வதற்கு உரிய அதிகாரி நமது புத்திதான். பல்லாயிரவர் சேர்ந்து ஒரு விஷயத்தை ஒப்புக் கொண்ட பின், கடைசியிலுள்ள ஒருவனுக்கும் அது உண்மையாகிவிட முடியாது, அந்த ஒருவனுடைய நல்லறிவு அதை ஏற்றுக் கொண்டால்தான் அவனுக்கு அது சத்தியமாகும். அறியாமை, பயம், பிடிவாதம், சுயநலம் முதலியவற்ருலேயே மதி மயக்கம் ஏற்படுகிறது. மயக்கத்தின் காரணங்களை நீக்கி, ஐயங்களைத் தெளிந்து காண்பதே நற்காட்சி. மக்களில் ஒவ்வொருவனும் ஒவ்வொரு விஷயத்தையும் தானே கண்டு தெளியவேண்டும்; பிறர் அநுபவங்கள் அவனுக்கு உதவியாக இருக்கமுடியுமே அன்றி, அவைகளே அவனுடைய அநுபவங்களாக ஆகிவிட முடியாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/57&oldid=1386946" இலிருந்து மீள்விக்கப்பட்டது