பக்கம்:பௌத்த தருமம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2

திரிபிடகங்கள் என்ற பௌத்தத் திருமுறைகளாக அமைந்து தருமத்திற்கு வழிகாட்டி வருகின்றன. சங்கத்திற்குரிய விநய விதிகளும் அவர் காலத்திலேயே அமைந்திருந்தன.

11-ஆம் நூற்றாண்டு வரை பாரத நாடு முழுதும் பரவியிருந்த தருமம், பின்னால் இந்நாட்டை விட்டே மறைந்துபோய், மற்ற ஆசிய நாடுகள் பலவற்றில் வளர்ந்து வந்தது. 25-நூற்றாண்டுகளுக்குப் பின் இப்போது பௌத்த தருமத்தைப் பற்றியும், போதி வேந்தராகிய புத்தரைப் பற்றியும், இந்தியாவிலும் உலகிலேயும் பெரு விழிப்பு ஏற்பட்டுளது. இது உலகின் மாபெரும் விந்தைகளிலே ஒன்று. பௌத்த தருமம், பழமை பழமையென்று ஒதுக்கித் தள்ளப்பெறாமல், பின்னைப் புதுமைக்கும் புதுமையாக விளங்கிவரும் பெருமைக்குக் காரணம் அதிலுள்ள உண்மையும், அதன் ஆற்றலுமேயாம். இந்த நவநாகரிகக் காலத்திலும், நமது அணுயுகத்திற்கு அப்பாலும், பேரறிவாளர்கள் கண்டுபிடிக்கக் கூடிய விஞ்ஞானப் புதுமைகளால் பௌத்த தருமத்தை அசைக்க முடியாது. ஏனெனில் அதுவே விஞ்ஞான ஆராய்ச்சிக்குப் பொருத்தமாகவும், பகுத்தறிவை ஆதாரமாய்க் கொண்டும் அமைந்த தருமமாகும்.

உலகிலே சமயங்கள் பெரும்பாலும் பரம்பொருள், ஆன்மா இரண்டையும் அடிப்படையாகக்கொண்டு அமைந்திருக்கின்றன. பரம்பொருளை விட்டுவிட்டு, ஆன்மாவே நிலையானது என்றும், அதுவே பரம்பொருளாகும் என்றும் ஒரு கொள்கையுண்டு. பூதவாதம், பொருளியல்வாதம், நாத்திகம் ஆகியவை, மாறுதலையும் அழிவையும் இயல்பாய்க் கொண்ட பொருள்களைத் தவிர உலகிலே வேறு நித்தியமான எதுவுமில்லை என்றும், ஜடப் பொருளிலிருந்தே உயிரும் தோன்றியது என்றும் கூறுவன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/6&oldid=1386752" இலிருந்து மீள்விக்கப்பட்டது