பக்கம்:பௌத்த தருமம்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அஷ்டாங்க மார்க்கம்

78


தியானத்தின் மூலம் பரிசுத்தமான எண்ணங்களை வளர்த்து ஏகாந்த வாசத்தில் இன்பம் பெற முயற்சி செய்து வந்தால், முடிவில் முந்திய பிறவிகளின் வரலாறுகளும், எதிர்கால நிகழ்ச்சிகளும், பிரபஞ்சத்தின் நியதியும் தெளிவாகத் தெரிவதுடன் நிருவாண இன்பமும் சித்திக்கும் என்று புத்தர் போதித்துள்ளார்.

தியானம் நான்கு வகைப்படும். அவையாவன:

1. ஏகாந்த வாசத்தில் ஆராய்ச்சி, பரிசீலனை, ஏகாக்கிரக சிந்தனை ஆகியவற்றின் மூலம் பெறும் இன்ப நிலை.

2, ஆராய்ச்சி, சிந்தனை முதலியவற்றைக் கடந்து, மனச் சாந்தியும் ஆனந்தமும் பெறும் நிலை.

3. சகல உணர்ச்சிகளும், இராகத் துவேஷங்களும் ஒடுங்கும் இன்ப நிலை.

4. தன்னிலே தான் நிறைவுற்று, சலனமின்றி, இன்பதுன்பங்களைக் கடந்து, பூரணமான அமைதியைப் பெறும் நிலை.

நல்லமைதி பற்றிப் புத்தர் கூறியுள்ளதாவது:

பிக்குகளே! இதிலே ஒரு பிக்கு. புலன்களின் ஆசைகளிலிருந்து ஒதுங்கி, தீய நிலைகளிலிருந்தும் ஒதுங்கி, குறித்த ஒரு பொருளைச் சாராது நிலைத்துள்ள சிந்தனையுடன் முதலாவது தியானத்தில் பிரவேசிக்கிறான். இது எகாந்த வாசத்தில் தோன்றுவது, ஆர்வமும் ஆனந்தமும் நிறைந்தது.

பிறகு, நிலைத்த சிந்தனையையும் நீக்கிவிட்டு, அவன் இரண்டாவது தியானத்தில் பிரவேசிக்கிறான்; அது (அந்நிலை) உள்ளமைதியாகும், மன உறுதியை மேலும் வலுப்படுத்துவதுமாகும். அதிலே நிலைத்த சிந்தனையில்லை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/78&oldid=1386990" இலிருந்து மீள்விக்கப்பட்டது