பக்கம்:பௌத்த தருமம்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

80

பெளத்த தருமம்


(ஞாபகம்) பழம் பிறப்புக்களைப்பற்றி அறியும் ஆற்றல். சமாதி நான்குவகைத் தியானங்களிலும் நிறைவு பெற்றுச் சாந்தியும் பரிசுத்தமுமான நிலை. பிரஞ்ஞை என்பது கருமவிதியின் தன்மையை நன்குணர்ந்து செய்யும் தியானத்தால் உண்டாகும் பேரறிவு.

போத்தியாங்கங்கள்

போதி அல்லது மெய்ஞ்ஞானத்தை அடைவதற்குரிய ஏழு போத்தியாங்கங்களாவன: ஸதி, தருமவிசாரம் (திரிபிடக ஆராய்ச்சி), வீரியம், ஆனந்தம், மனனம், சமாதி (சாந்தி), உபேட்சை (சமதிருஷ்டி).

1. ஸதி: ஒவ்வொரு காரியத்தையும் கவனமாகச் சிந்தனை செய்து நிறைவேற்றிப் பழகி வந்தால், ஸதி என்ற போத்தியாங்கத்தை அபிவிருத்தி செய்துகொள்ள முடியும். காரணத்திலிருந்து காரியம், காரியத்திலிருந்து காரணம் என்ற முறையில் சிந்தித்துப் பார்த்து வந்தால் இதன் ஆற்றல் அதிகமாகும்.

2. தரும விசாரம் : திரிபிடக ஆராய்ச்சியும் மனோதத்துவத்தை விளக்கும் நூல்களின் ஆராய்ச்சியும் வேண்டும். உடலமைப்பிற்குரிய கந்தங்கள், புலன்களின் உணர்வுகள், மன உணர்ச்சிகள், இந்திரியங்கள், பலங்கள், போத்தியாங்கங்கள், தியானங்கள் முதலியவற்றைப் பற்றிய ஆராய்ச்சிகளிலும் தேர்ந்திருக்க வேண்டும். மூடர்களுடன் கூட்டுறவு கொள்ளாது, விஞ்ஞானம் முதலியவற்றில் தேர்ந்தவர்களோடு உறவு கொள்ள வேண்டும். மனத்தையும் உடலையும் சமநிலையில் வைத்துக்கொள்வதற்கு முயற்சி செய்ய வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பௌத்த_தருமம்.pdf/85&oldid=1386932" இலிருந்து மீள்விக்கப்பட்டது