பக்கம்:மகான் குரு நானக்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

11


இறைவனை புறத்திலும், அகத்திலும் வழிபட்டு, தனது யோக தவத்தின் வலிமையாலும், நிஷ்டையின் ஒழுக்க சாதனைகளாலும் பரம் பொருளைத் தம்முள் கண்ட மகானாகவும், இறைஞானம் நிறைந்த மகாத்மாவாகவும் அவர் திகழ்ந்துள்ளார்.

தனக்கு வந்த துன்பம், நோய், அச்சம், வறுமை எல்லாவற்றையும் துச்சமாகத் துக்கி எறிந்து விட்டு, நாள்தோறும் மக்களுக்கு ஞானோபதேசம் செய்து, ஊர் ஊராக, நாடு நாடாக அலைந்து திரிந்து வாழ்க்கையின் ஞான விதைகளை மக்களது நெஞ்சங்களில் தூவி, புதியதொரு வாழ்வியல் மார்க்கத்தை மக்களுக்காக உருவாக்கி; அதன் வழியிலே அவர்களை நடக்க வைத்தவர் ஞானி குருநானக் சொந்தபந்தங்களைத் துறந்து கடுந்தவம் புரிந்தார்.

தனது மாணவர் மர்தான்ாவுடன் சைதாபாத் என்ற நகர் வந்தார். அவர் அன்று தங்கிய அந்த ஊரை மக்கள் இன்று அமெனாபாத் என்று அழைக்கின்றார்கள். அந்த ஊரில் பாய்லாலு என்ற ஓர் ஏழை தச்சன் வீட்டிலே வந்து அவர் தங்கினார்.

அந்த ஏழைத் தச்சன் ஒரு மனிதாபிமானி; குருநானக் அபிமானி, அன்பு மட்டுமல்ல தச்சனிடம் இருந்த ஒழுக்கமும் கூட நானக் என்னென்ன உபதேசங்களை மக்களுக்கு கூறினாரோ அதற்கேற்ப வாழ்ந்து வந்த குருநானக் விசுவாசியாகவும் அந்த ஊரில் விளங்கி வந்தவர்.

அமெனாபாத் மாநிலத்தின் ஆளுநர் பெயர் மாலிக்பாகோ. குருநானக் ஏழைத் தச்சன் வீட்டில் தங்கி இருந்த அன்று, கவர்னர் ஒரு விருந்து நடத்தினார். அந்த விழாவில் அந்த நகரின் முக்கியமான செல்வர்கள், அதிகாரிகள், மதகுருக்கள், முல்லாக்கள் எல்லாம் வந்து கலந்து கொண்டார்கள். அதே நேரத்தில் ஊருக்குப் புதிதாக வருகை தந்துள்ளவர்களும், ஏழை மக்களும் கூட விருந்தில் கலந்துண்ணலாம் என்று ஆளுநர் அனைவருக்கும் வேண்டுகோள் விடுத்திருந்தார். குருநானக் தங்கள் ஊருக்கு வந்திருக்கிறார்கள் என்ற செய்தி கேட்ட உடனே அவரிடம் சென்று எல்லோரும் அருளாசி பெற்றார்கள். அப்போது குருநானக்கிடம் ஆளுநர் அனுப்பிய ஒர் அதிகாரி வந்தான். கவர்னர் தங்களை விருந்துக்கு அழைத்து வருமாறு என்னை அனுப்பினார் என்றான்.