பக்கம்:மகான் குரு நானக்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

19


எப்படியாவது மகனை நல்ல வழிக்குக் கொண்டு வந்து விட வேண்டும் என்று மேதாகலுராய் முடிவு செய்தார். அதற்குரிய வழிகளைத் தனது நண்பர்களிடம் பேசும் போதும் கேட்டார்.

அதற்கு ஒரு நண்பர் மேதாகலுராவுக்கு யோசனை கூறும் போது, இழிவான வேலை ஏதாவது ஒன்றை நானக்கிடம் கூறி, அதைச் செய்யச் சொல்லுங்கள். உடனே அவனுக்கு மான ரோஷம் வரும். நான் செய்ய மாட்டேன். அது கேவலமானது என்று மறுப்பான் பிறகு நீங்கள் கூறுகின்ற யோசனை என்னவோ அதற்கேற்ப நடப்பான் என்றார். இந்த யோசனை ஒரளவுக்கு நானக் தந்தைக்கு உடன்பாடானதாகவே தெரிந்தது.

அதனால், ஒருநாள் மேதாகலுராய் தனது மகனை அழைத்தார். 'நீ தினமும் நமது வீட்டிலுள்ள மாடுகளை ஒட்டிக் கொண்டு,வயற் பக்கங்களிலே மேய்த்துக் கொண்டு வா” என்றார். மகனிடம் என்ன பதில் அவர் எதிர்பார்த்துக் கூறினாரோ அதன்படி நடக்கவில்லை.

தந்தை மாடுகளை மேய்த்துக் கொண்டு வா என்று கூறினால், மகன் மானரோஷத்தோடு தன்னை எதிர்ப்பான். பிறகு அவர் கூறும் எந்த வேலையையும் ஏற்றுச் செய்ய முன்வருவானென்று அவர் எதிர்பார்த்த முடிவு, தந்தைக்கு ஏமாற்றத்தையே தந்தது. ஆனால் நானக், தந்தை கூறிய மாடு மேய்க்கும் தொழிலைச் செய்வதற்கு மனநிறைவோடு, மகிழ்ச்சியாக 'சரி தந்தையே' என்று ஒப்புக் கொண்டார்.

மகன் நானக், தனது யோசனையை ஏற்று ஒப்புக் கொண்டதை அறிந்த தந்தை மனம் மிக நொந்தார். இதற்கா மகனை இவ்வளவு செல்லமாக வளர்த்தோம். கடவுளே இதுவும் உன் சோதனை தானா? என்று மேதாகலுராய் வருத்தப்பட்டார்.

ஒவ்வொரு காலை தோறும் நானக், மாடுகளைத் தொழுவத்தில் இருந்து ஓட்டிச் சென்று மேய்த்துக் கொண்டு இருப்பார். எங்காவது ஒரு மரத்தடியில் அமர்ந்து கடவுள் சிந்தனையிலே மூழ்கிவிடுவார்.