பக்கம்:மகான் குரு நானக்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

27


ஊதியமும் அதுதான்” என்றார் நானக். இவ்வாறு கூறிய அவர், உடனே இறை தியானத்தில் அமர்ந்து விட்டதைக் கண்டு தந்தை நின்று கொண்டே இருந்தார்.

நானக் தனது தியானத்திலிருந்து எழ அதிக நேரமானது. அதுவரை அவரது தந்தை மேதாகலூராய் மகன் எதிரிலேயே நின்று கொண்டிருந்தார். அதையும் கவனியாமல் நானக், தனது அறை யிலே சென்று அமர்ந்தார். அப்போது அவரது அம்மா மகனை உண்பதற்காக அழைக்க வந்தார்.

'மகனே, நேரம் காலம் ஏதுமில்லாமல் கடவுளையே பூஜை செய்து தியானித்துக் கொண்டிருக்கிறாயே, இது சரியன்று பெரிய ஆன்மிக ஞானிகளாலும், வேதாந்தி - சித்தாந்திகளாலும் கண்டறிய முடியாத ஒரு பரம்பொருளை, நீ தேடிக் கொண்டு வாழ்நாளை வீழ்நாளாக்குவது நியாயமன்று உன்னால் எல்லாம் கடவுளைக் காணமுடியுமென்று நினைக்கிறாயா மகனே' என்று வருத்தம் தவழ்ந்த முகத்தோடும் குரலோடும் கேட்டார் தாயார்.

அதற்கு நான்க், 'பிறப்பொக்கும் எவ்வுயிர்க்கும் என்பது தாங்கள் அறியாததா அம்மா? பிறப்பால் உயர்ந்தோர், தாழ்ந்தோர் என்பது கிடையாதம்மா! கடவுளைக் காண்பதற்குத் தனித் தகுதி பெற்றவர்கள் யார்? ஒருவரும் இல்லை தாயே! கடவுளை எந்த நேரமும் மனதில் நிறுத்தி யார் தியானம் செய்கிறார்களோ, அவர்களால்தான் காண முடியும் கடவுளை. அவர்கள்தான் உயர்ந்தவர்கள் பிறப்பால் அன்று யார் கடவுளை மறந்து விடுகிறார்களோ, அவர்கள் தாழ்ந்தவர்கள் இதுவும் பிறப்பால் வருவதல்ல தாயே! செயலால் தான் என்று நானக் தனது தாய்க்கு தமிழ்நாட்டுச் சித்தர்களது எண்ணத்தையே எதிரொலித் தார். இவ்வாறு தனது அன்னையிடம் உரையாடிக்கொண்டிருக்கும் போதே, மீண்டும் தியானத்தில் அவரையம் அறியாமலேயே அவர் மூழ்கிவிட்டார்.

இப்போது என்ன வயது தெரியுமா நானக்குக்கு? பதினேழு முடிந்தது. இந்த இளம் வயதிலேயே நானக், உளம் உருக, உடல்-