பக்கம்:மகான் குரு நானக்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

39


சகோதரி பீபி நானகி மனம் ஒடிந்து தனது வீடு திரும்பினார். எப்படியாவது தம்பியை அழைத்துக் கொண்டு வந்து அவருடைய மனைவி மக்களுடன் சேர்த்து வாழ வைத்து விடலாம் என்று திட்டமிட்ட சகோதரியின் முயற்சி தோல்வி கண்டுவிட்டது. நானக் தனக்காக மட்டுமே இல்லாமல், இறைவன் படைப்பிலுள்ள எல்லா உயிர்களுக்கும் தொண்டு செய்யும் ஒரு கடவுள் தொண்டனாக மாறிவிட்டார்.

கல்லறையை விட்டு நானக் கால்நடையாகவே புறப்பட்டார். ஒவ்வொரு ஊர்தோறும் சென்று, மக்களுக்குரிய நல்வழி ஞானத்தைப் போதித்திட அவர் புனிதப் பயணம் சென்றார்.

குரு நானக்குடன், பாய்மர்தனா என்ற ஒரு பாணர்குல மாணவனும் சென்றான். அந்த பாணன் தனது குலத் தொழிற்கருவியான மண்டோலினி எனும் இசைக் கருவியை வாசித்துக் கொண்டே நானக்குடன் பயணம் செய்வான் அதனால் இருவருக்கும் நடைப்பயணக் களைப்பு அவ்வளவாகத் தெரியாது.

நானக்கும், பாய்மர்தனாவும் நடந்து கொண்டே இருந்தபோது, மாணவனைப் பார்த்து, மர்தனா மண்டோலினியை எடுத்து வாசி கேட்டுக் கொண்டே போவோம் என்றார் நானக்.

உடனே மர்தனா குருவே நான் மண்டோலினியைக் கொண்டு வரவில்லையே என்றான்.

அப்படியா! அது உனது குல இசைக் கருவியாயிற்றே; ஏன் கொண்டு வர மறந்தாய்? போகட்டும் அதைப் பற்றி வருந்தாதே! இதோ, இந்த வட திசையை நோக்கிச் சிறிது தூரம் செல். உனக்கு 'ரூபாய்' என்ற இசைக் பருவி ஒன்று கிடைக்கும் என்றார் நானக்

'எனக்கு வடதிசையில் எவரையும் தெரியாதே குருவே' என்றான் மர்தானா!

'நான் சொல்கிறபடி செய்! இசைக் கருவி கிடைக்கும்' என்றார் நானக்.