பக்கம்:மகான் குரு நானக்.pdf/46

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

45


திருமந்திரத்தைப் போதித்து ரொட்டிக் கடைக்காரனுக்கு விடை கொடுத்து ஊருக்கு அனுப்பி வைத்தார். அவன் நானக்கை விட்டு பிரிய மனமிலாதவனாய் நகர்ந்தான்.

அந்த நகரைவிட்டு நானக் மீண்டும் தனது ஞானோபதேசப் பயணத்தைத் துவக்கினார். இடையிடையே அவரைத் தேடி வந்து பார்க்கும் மக்களுக்குத் தரிசனம் தந்து இறைவனை அடைவதற்கான மார்க்கத்தைக் கூறியபடியே பயணம் செய்து வந்தார். நாட்கள் நகர்ந்து, வாரங்களாக, மாதங்களாக மாறி, ஆண்டு களாகின. மர்தானாவும் - நானக்கும் எல்லா இடங்களுக்கும் சென்றபடியே இருந்தார்கள்.

சத்குரு நானக் எந்தெந்த பக்கம் நோக்கிப் பயணம் போக வேண்டும் என்பதைக் காட்ட, ஒளி வட்டம் ஒன்று அவருக்கு முன்பு சென்றபடியே இருந்தது. அதைப் பின் தொடர்ந்து குரு நானக் நடந்தார். அவரைப் பின்பற்றி மர்தானா நடந்தான்! மர்தானாவுடன் நானக்கின் மற்றொரு மாணவரான பாலா என்பவரும் பின் சென்றார். இந்த இரு சீடர்கள்தான் குருநானக் வாழ்க்கை முழுவதுமாக அவருடன் இருந்தவர்கள் ஆவர்.

குருநானக், மர்தானா, பாலா மூவரும் ஒரு நாள் மாலை, காட்டின் நடுப் பகுதியிலே நடந்து கொண்டிருந்தார்கள். அப்போது காவி உடை பூண்டு, நெற்றியிலே பொட்டு வைத்துக் கொண்டு, இறைவன் அடியார் போல் வந்த ஒருவன். அவர்கள் மூவரையும் மனமுவந்து எதிர்கொண்டு அழைத்தான்.

அந்த அடியார், நானக்கையும் அவருடைய சீடர்கள் இருவரையும் கண்டு, "அன்புடையவர்களே நீங்கள் மூவரும் எனது குடிலுக்கு வந்து வாழ்த்துதல் வேண்டும்" என்று அவர்களது பாதங்களிலே வீழ்ந்து, பணிந்து வேண்டிக் கொண்டான்.

இறைவன் அடியார் போல வந்தவன், உண்மையில் அடியார் அல்லன். அவன் ஒரு கொள்ளைக்காரன். காட்டிலே வருபவர்களிடம் இரக்கம் உள்ளவனைப் போல கருணையோடு பேசி, தனது குடிசைக்கு அழைத்துச் சென்று, உணவு கொடுப்பான். உரையாடி மகிழ்வான்; பிறகு உறங்கவும் இடம் தருவான்.