பக்கம்:மகான் குரு நானக்.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

மகான் குருநானக்


வந்தவர்கள் அயர்ந்து உறங்கும்போது, அவர்களைக் கொன்று, அவர்களிடமுள்ள பொருள்களைக் கொள்ளையடித்துக் கொள்வான். காட்டில் வருபவர்களைக் கொலை செய்வதும், கொள்ளை படிப்பதும் அவன் தொழில். அதே எண்ணத்தில் தான் குரு நானக்கையும், அவரோடு சென்ற இரண்டு சீடர்களையும் கொலை செய்யவே குடிசைக்கு வந்து வாழ்த்த வேண்டும் என்று அவன் வேண்டிக் கொண்டான்.

ஞான மகான் குருநானக் அந்தக் கொள்ளைக்காரனை ஒரு முறைதான் கண்டார். அவனிடமிருக்கும் எண்ணற்ற விவரங்களை, விபரீதங்களை உடனே அறிந்து கொண்டார். பிறகு அந்த போலி இறையடியானைப் பார்த்து, 'உண்மையான இறையடியவனே! நாங்கள் யார் வீட்டிலும் தங்குவது இல்லை; ஆயினும் உனது அன்பான வேண்டுகோளை ஏற்று, உம் வீட்டு விருந்தினராக இருக்கிறோம். வானம்தான் எங்களுக்குக் கூரை! பூமிதான் வீடு! அதில்தான் நாங்கள் உறங்குவது வழக்கம் அன்பனே! என்றார்.

அந்த போலி இறையடியான் போல வேடமிட்ட கபட வேடதாரி பெயர் என்ன தெரியுமா? சஜ்ஜன் என்பதே. அந்தக் கொள்ளைக்காரனுக்கு அன்று மிகப் பேரானந்தம்! காரணம் மூன்று பேர்கள் அவன் விரித்த வலையிலே மாட்டிக் கொண்டார்களே அதனால்!

ஆனால் குருநானக், கண்ணாடியில் உருவத்தைப் பார்ப்பது போல, அந்த அடியானின் முகத்திலேயேள அவன் எண்ணங்களைப் பார்த்துப் புரிந்து கொண்டார். அதனால், அவர் தனக்குள்ளேயே சிரித்தார்.

பிறகு, கொள்ளைக்காரனும் மற்ற மூவரும் ஓரிடத்தில் உட்கார்ந்தார்கள். சத்குரு நானக், மர்தானாவை அழைத்தார். ரூபாய் இசைக் கருவியை எடுத்து வாசி என்று குரு கேட்டு கொண்டார் மர்தானாவை, அவனும் அவ்வாறே வாசித்தான் அந்தக் கருவியிலே இருந்து கிளம்பிய இசை வெள்ளம், அந்தக் காடு முழுவதையுமே இசை இன்பத்தில் மூழ்கடித்தது. சஜ்ஜன் என்ற அந்தக் கபட வேடதாரி இசையை ரசிப்பது போல பாசங்குச் செய்து கொண்டிருந்தான்.