பக்கம்:மகான் குரு நானக்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

65


தலைமேல் ஏற்றப்பட்ட சுமைகள் அவர்களது தலைகளின் மேல் அழுத்தி நெருக்காமல், ஒர் அரை அடி உயரத்தில் மிதந்து கொண்டே வந்தன. ஆனாலும், அவர்கள் நடந்து கொண்டேதான் இருந்தார்கள். ஏற்றப்பட்ட சுமைகளும் அவர்களைத் தொடர்ந்து வந்து கொண்டே இருந்தன.

படைவீரர்கள் இந்த அற்புதத்தைப் பார்த்துத் திகைத்தார்கள். அப்படியே அசந்து நின்று விட்டார்கள். இந்தச் செய்தி பாபர் பேரரசனுக்கும் தெரிவிக்கப்பட்டது. அவன் வந்து இந்த அதிசயத்தைப் பார்ப்பதற்குள் அவர்கள் மூவரும் வந்து சேர வேண்டிய இடத்திற்கு வந்து சேர்ந்து, சுமைகளை இறக்கி வைத்து விட்டார்கள். அதனால், அந்த அற்புதக் காட்சியைப் பாபரால் பார்க்க முடியவில்லை.

படைவீரர்கள் பாபருக்கு அனுப்பிய செய்தி பொய்யென்று அவன் நினைத்து விட்டான். இருந்தாலும், இந்த அதிசயம் உண்மைதானா என்று அவர் சோதிக்க நினைத்தார். சத்குரு சிறை வைக்கப்பட்டார். சிறையிலிருந்த தானியங்களைக் குத்திக் கொடுக்க வேண்டிய வேலைகளை சத்குருவுக்குப் பணிக்கப் பட்டது. குருநானக் எதைக் குறித்தும் கவலைப்படாமல் தியானம் செய்வதிலே மூழ்கி விட்டார்.

தானியத்தைக் குத்தும் இயந்திரம் தானாகவே வேலை செய்து கொண்டிருந்தது. குத்திய தானியம் வெவ்வேறாகப் பிரிந்து கொண்டிருந்தது. ஆட்கள் எவரும் வேலை செய்யவில்லை. தான்ாகவே எல்லா வேலைகளும் நடந்து கொண்டிருந்தன.

குருநானக் வேலை செய்யும் இடத்திற்குப் பேரரசர் பாபர் வந்து பார்த்தார். நானக் எந்த வேலையையும் செய்யவில்லை. அவர் கடவுள் தியானத்திலே திளைத்திருந்தார். ஆனால், எல்லா பணிகளும் தானாகவே நடந்து கொண்டிருப்பதை பாபர் கண்டார். சத்குரு தியானத்திலே இருந்து எழுந்திருக்கும் வரை பாபர் காத்துக் கொண்டே இருந்தார். அவர் எழுந்ததும், குரு நானக்கிடம் பாபர் மன்னிப்புக் கேட்டுக் கொண்டார். பாபருக்கு சத்குரு அறிவுரைகளைக் கூறி ஆசி வழங்கினார். பாபர் தனது தவறுகளை உணர்ந்து, குருநானக் ஒரு மகான்தான் என்று நம்பி மனம் மாறிச் சென்றார்.