பக்கம்:மகான் குரு நானக்.pdf/77

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

மகான் குருநானக்


விளக்கினாள். சீறிய கோபத்தோடு தலைமை சூனியக்காரி விரைந்து வந்தாள். தனக்குள்ள முழு மந்திர ஆற்றலையும் ஜெபித்தாள். எதுவும் நடைபெறாததால் படுதோல்வி கண்ட அவள், சத்குருவின் காலில் விழுந்தாள்.

குருநானக் அவளையும், மற்ற சில சூனியக்காரிகளையும் மன்னித்தார். சூனிய வித்தைகளைப் பயன்படுத்தி மக்களைத் துன்பப்படுத்துவது பாபம் என்று அவர்களுக்கு அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்.

இந்த நிகழ்ச்சிகளுக்குப் பிறகு, குருநானக் தனது சீடர்களுடன் வழக்கம்போல தனது ஞான யாத்திரையைத் தொடர்ந்தார். அசாம் பகுதியிலே உள்ள அடர்ந்த காடுகளில் புகுந்து அவர்கள் மூவரும் நடந்து செல்லும் போது, சீடர்களைப் பார்த்து ஜாக்கிரதையாக என்னைப் பின்பற்றி வாருங்கள். பின் தங்கிட வேண்டாம். ஏன் தெரியுமா? மனிதர்களைக் கொன்று திண்பவர்கள் இந்தக் காட்டிலே இருக்கிறார்கள் என்று எச்சரித்தபடியே சென்றார். குரு கூறியதைக் கேட்டு பாலாவும், மர்தானாவும் பயந்து கொண்டே அவரைப் பின்பற்றினார்கள். அப்போது அவர்களைப் பசி நெருப்பாய் எரித்தது.

குருதேவா எனக்கு அதிகமாகப் பசி துன்புறுத்துகின்றது என்று மர்தான்ா வழக்கம் போலச் சொன்னான். உடனே குரு தேவர் 'உனது பசி எனக்கும் தெரிகிறது. இதோ இந்த வழியாகச் செல். அந்த திசையில் உணவு உனக்குக் கிடைக்கும்' என்றார் அவர்.

சத்குரு காட்டிய திசையிலே சிறிது தூரம் சென்றான். இரண்டு மலைவாசிகள் திடகாத்ரமான உடல் பலத்தோடு ஓடி வந்து மர்தானா மீது பாய்ந்து, குண்டுகட்டாகக் கட்டித் துக்கிக் கொண்டு அவர்களது தலைவன் முன்னே கொண்டு போய் போட்டார்கள். மர்தானாவை ஒரு மரத்தில் பலாத்காரமாகக் கட்டினார்கள். அந்த மரம் எதிரே, ஒரு கொப்பரையில் எண்ணெய் கடும் சூட்டோடும், நெருப்போடும் கொதித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்த்த மர்தானா உடல் துடித்தான் எதற்காக எண்ணெய் கொதிக்கிறது?