பக்கம்:மகான் குரு நானக்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

77


காட்டிலே செல்வோரை மலைவாசிகள் துக்கிக் கொண்டு வந்து உயிரோடு கொதிக்கும் கொப்பரை எண்ணெயில் போட்டுப் பொரித்துத் தின்பார்கள். அதுபோல மர்தானாவையும் வறுத்துத் தின்றிடத்தான் அந்த எண்ணெய் கொப்பரையிலே கொதித்துக் கொண்டிருந்தது. அதனால்தான் எண்ணெய் கொதிப்பதைக் கண்டு மர்தானா நடுங்கி விட்டான்.

என்ன ஆனான் மர்தானா என்பதை சத்குரு தனது ஞானக் கண்ணால் அறிந்தார். உடனே தனது சீடன் இருக்கும் இடம் நோக்கி அவர் விரைந்தார். குருநானக் வந்ததும் அந்த மலை வாசிகள். அவரையும் பிடித்துக் கட்டிப் போட ஓடிவந்தார்கள்.

என்ன நடந்தது தெரியுமா அப்போது? எந்த இடத்தில் ஒவ்வொரு மலைவாசியும் நின்று கொண்டிருந்தார்களோ, அவர்கள் அந்தந்த இடங்களை விட்டு ஆடவுமில்லை, அசையவு மில்லை. அப்படியே மரம்போல நின்று விட்டார்கள். சத்குருவின் தெய்வீக ஆற்றல் அவர்களை ஒரடிகூட நகராமல் செய்துவிட்டது எனலாம். உடனே, பாலா மர்தானா உள்ள இடத்துக்கு ஓடி அவன் கட்டுக்களை அவிழ்த்து விட்டு விடுதலை செய்தான்

மலைவாசிகள் அனைவரும் குருநானக்கின் ஆற்றலையும், அருட்தன்மையினையும் பார்த்து,அவர்கள் அப்படியே மனம் மாறிவிட்டார்கள். பிறகு அவர்கள் நின்ற இடங்களில் இருந்தவாறே 'மகானே எங்களை மன்னித்து அருளாசி வழங்குங்கள்' என்று கதறியழுது கண்ணீர் சிந்தினார்கள். நானக்தான் இரக்க சுபாவமும், கருணையுள்ளமும் கொண்டவராயிற்றே!

சத்குருவின் கருணை அன்பால் அவர்கள் எல்லாரும் நடக்கவும், நகரவும் சக்தி பெற்றார்கள். அவர்கள் சத்குரு நின்றிருந்த இடத்திற்கு ஓடிவந்து அவருடைய திருவடிகளைப் பற்றிக் கொண்டு மன்னிக்குமாறு வேண்டிக் கொண்டார்கள். நானக் அவர்களை மன்னித்தார். சீக்கிய நெறிகளை அவர்களுக்குப் போதித்தார். மனம் மாறிய அந்த மலைவாசிகள் சீக்கிய மதவழியிலே நின்று வாழ்ந்தார்கள்.