பக்கம்:மகான் குரு நானக்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

78

மகான் குருநானக்



சத்கருவின் பயணம் மீண்டும் தொடர்ந்தது. சத்குருவும்,மற்ற இரு மாணவர்களும் ஒருநாள் நடுக்காட்டில் நடந்து கொண் டிருந்தார்கள். மறுபடியும் மர்தானாவுக்குப் பசி வாட்டியது. அதை குரு உணர்ந்தார். அவர் மர்தானாவைப் பார்த்து, "மர்தானா உனக்குக் கடுமையான பசியோ என்றார். சரி, அதோ அந்தச் சிகைக்காய் மரத்திலே உள்ள பழங்களைப் பறித்துத் தின்னு. பசி தணியும். ஆனால் ஒரு நிபந்தனை. எவ்வளவு பழங்களை உன்னால் தின்ன முடியுமோ, அவ்வளவையும் அங்கேயே தின்னலாம். ஆனால், ஒரு பழத்தைக் கூட நீ எடுத்து வரக் கூடாது." என்றார் குரு.

'குருதேவா சிகைக்காய் கசக்குமே எப்படி நான் அதை தின்ன முடியும் என்றான் மர்தானா.

'மர்தானா பசி எடுக்கிறது என்கிறாயே! அதனால் சோன்னதைச் செய்” என்றார் சத்குரு.

மர்தானா ஆசையோடு சிகைக்காய் மரத்தின் மேலேறிப் பழத்தை வயிறு புடைக்கத் தின்றான். அவனுக்கு அம்மரத்தின் பழங்கள் கசக்கவில்லை. தேன் போல.இனித்தபடியே இருந்தது. பசியும் தணிந்தது. ஆனால், குரு கூறிய வார்த்தையை மர்தானா மறந்து விட்டான். மறுநாளுக்கும் வேண்டி பழங்களை பறித்துக் கொண்டு வந்தான் அவன்.

மறுநாள் பசி வருமுன்பே நேரத்திலேயே! தான் பறித்து வைத்திருந்த பழங்களைத் தின்றான். பாவம் ஒரே கசப்பு! எட்டிக் காயைப் போல வாயெல்லாம் கசந்து கொண்டே இருந்தது. உமிழ் நீரைத் துப்பியபடியே இருந்தான். அவன் வாயும் கசந்தது வயிறும் குமட்டிற்று. நாக்கு எச்சிலைத் தரையிலே சிந்தியபடியே இருந்தது! துப்பித் துப்பி வாயும் ஒய்ந்து விட்டது.

மர்தாமனாவின் செயல்களை எல்லாம் ஒன்றும் தெரியாதவாறு சத்குரு கவனித்தபடியே இருந்தார். பிறகு அவராலேயே அடக்க முடியவில்லை சிரிப்பை! மர்தானாவோ குருவுக்குத் தெரியாது என்று எண்ணிக் கொண்டு, கசப்பைத் தாங்க முடியாமல் இங்கும் அங்குமாக எச்சிலை உமிழ்ந்தபடியே கர் கர்ரென்று காறிக் காறித் துப்பிக் கொண்டே இருந்தான்.