பக்கம்:மகான் குரு நானக்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

என்.வி. கலைமணி

81


வேண்டும் என்ற அவா உந்தலால் அவர் தமிழ்நாட்டிலே உள்ள முக்கடல் சங்கமமான கன்னியாகுமரி முனைக்கும், இராமேஸ்வரம் திருக்கோவில் உள்ள யாத்திரிகத் தலத்திற்கும் வருகை தந்தார். தமிழ் மக்களுக்கு உபதேச உரைகளை ஆங்காங்கே போதித்தார் அந்த ஞான மகான்!

தமிழ்நாட்டின் புகழ் பெற்ற புனிதத் தலங்களுள் ஒன்றான இராமேஸ்வரம் கடற்கரையில், சத்குரு நானக் ஒருநாள் நின்று கொண்டு அங்குள்ள மக்களின் வாழ்க்கை நிலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தார்.

அப்போது திடீரென்று தனது சீடர் மர்தானாவைப் பார்த்து, "என் நண்பர் எனது வருகைக்காகக் காத்துக் கொண்டிருக்கிறார். அவரை உடனே சென்று பார்க்க வேண்டும்" என்று சத்குரு கூறிப் புறப்பட்டார். மாணவர்கள் பின் தொடர்ந்தார்கள்.

தமிழ்நாட்டில் அவருக்கு அவ்வளவு முக்கியமான நண்பர் யாராக இருக்க முடியும் என்று எண்ணுகிறீர்களா? இதோ அவரது நண்பர் விவரம் :

தமிழ்நாட்டின் ராமேஸ்வரம் அருகில் சங்கல் தீபம் என்ற ஒரு தீவு இருக்கிறது. அந்தத் தீவின் மன்னன் ராஜா சிவநாத். அவர் ஓர் இறையன்ப பக்தர். அந்த சிற்றரசருக்கு நெருங்கிய நண்பர் ஒருவர். அவர் பெயர் பகீரத், சிறந்த புகழ் பெற்ற கடல் வாணிகர் அவர். தனது வணிகம் சம்பந்தமாக அந்த வியாபாரி பல நாடுகளுக்கும் நகரங்களுக்கும் சென்று வரும் கப்பல் வாணிகர். அந்தந்த நாடுகளிலே அவரைப் போன்ற புகழ் பெற்ற, செல்வச் சீமான்களான வியாபாரிகள் பலர் அவருக்கு நண்பர்களாக இருந்தார்கள். அவர்களுடன் பகீரத் அடிக்கடி தொடர்பு கொள்வார்.

எந்தெந்த நாட்களில், எவ்வப்போது, என்னென்ன முக்கியமான, சிறப்பான, அதிசயமான நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன என்ற விவரத்தை பகீரத் தெரிந்து கொள்வார். அத்தகைய சிறப்புச் சம்பவங்கள் இருந்தால் கப்பல் வணிகர், சங்கல் தீவை ஆட்சி செய்து வரும் தனது அருமை நண்பருக்குத் தெரிவிப்பார்.