பக்கம்:மகான் குரு நானக்.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

மகான் குருநானக்


  • யார் ஒருவர் மெய், வாய், கண், மூக்கு, செவி போன்ற பொறிகளின் ஆசைகளுக்கும், ஆதிக்கத்துக்கும் அடிமை ஆகாமல் இருக்கின்றாரோ - அவர்தான் உண்மையான சீக்கியர்!
  • ஆண்டவன்ன எப்போதும் நெஞ்சிலே நிறுத்தி, அதற்கேற்ற வாறு பணிந்து, அடங்கி, அமைதியோடு வாழ்பவரே சிக்கியர்!
  • இன்னா செய்தார்க்கும் இனியவை செய்பவரே, அவர்களை மன்னித்து நேசிப்பவரே - சீக்கியர்!
  • தன்னலத்தை வெறுத்து பொது நலத்தைப் பேணி பாதுகாத்து, மக்களுக்காகத் தொண்டு செய்பவரே - சீக்கியர்!

தனது பாடல்களைக் கேட்டும், ஞானப் பொழிவுகளது கருத்துக்களை ஏற்றும், ஆங்காங்கே உள்ள மக்கள் சீக்கிய மத நெறிகளைப் பின்பற்றி வாழ்வதை அவர் நேரில் கண்டார். அளவிலா மகிழ்ச்சியும் பெற்றார். அதனால் அவரது மதம் வட இந்தியாவிலே புனித மதமாக வளர்ந்தது.

அருள்மிகு ஞானியான சத்குரு நானக், 1469 ஆம் ஆண்டு பிறந்து, 1538 ஆம் ஆண்டு வரை தூய்மையான மனித நெறிகளை ஒரு மதமாக்கி, அதற்கு சீக்கிய மதம் என்று புனிதப் பெயர்சூட்டி, மக்களிடம் ஒரு மறுமலர்ச்சி வாழ்வியலைத் துவக்கிடும் மகானாக ஏறக்குறைய 69 ஆண்டுகள் இந்திய மண்ணிலே நடமாடினார்.

மக்களைச் சூழ்ந்து கொண்டிருந்த அறியாமை, அகம்பாவம், ஆசை, மாய மந்திரம், ஏவல் சூனியம், பொறாமை, கொலை, கொள்ளை, மூடநம்பிக்கை வழிபாடுகள், அதிகார ஆணவங்கள், தன்னல பந்த பாசங்கள் போன்ற இருள்களை மக்கள் மனங்களிலே இருந்து அகற்றிடும் சத்குரு என்ற ஞான நிலவாக நடமாடி மக்களுக்கு அருள் ஒளி வழங்கினார் குருநானக் என்ற மனித குல பெருமான்.

இந்து - முஸ்லிம் என்ற மத வேறுபாடுகளைக் களையவும், இனங்கள் என்ற களைகளை வேரோடு பிடுங்கி எறியவும், மனித சமத்துவம் என்ற பயிர்களை உருவாக்கும் அருளாளன் என்ற