பக்கம்:மகாபாரதம்-அறத்தின் குரல்.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நா. பார்த்தசாரதி

99

கொண்டிருந்தாள். ‘ஒருவேளை அவனே அர்ச்சுனனாக இருக்கலாமோ? அந்தணனாக உருமாறி வந்திருக்கிறானோ?’ என்று சந்தேகம் இயற்கையாகவே அவள் மனத்தில் எழுந்தது. துட்டத்துய்ம்மன் அந்தணனுக்கு (அர்ச்சுனனுக்கு) மாலையிடுமாறு திரெளபதிக்குக் கூறினான். அவள் மெல்ல நடந்து வந்து விற்பிடித்த கையினனாக நிற்கும் அவன் கழுத்தில் மணமாலையை அணிவித்து விட்டு நாணத்தோடு அருகில் தலைகுனிந்து நின்று கொண்டாள். தாங்களெல்லாம் வீற்றிருக்கும் பேரவையில் திரெளபதி ஓர் அந்தண இளைஞனுக்கு மாலை சூட்டிய காட்சி துரியோதனன் முதலிய அரசர்களின் மனங்களைக் கொதிக்கச் செய்தது. அவனையும் அவையிலுள்ள மற்ற அந்தணர்களையும் போர் புரிந்து துரத்தினால் என்ன?... என்ற அளவிற்கு வளர்ந்து விட்டது அவர்கள் சிந்தனையின் கொடுமை. திடீரென்று அந்தணர்கள் மேலும் மணமாலையோடு நின்ற அர்ச்சுனன் மீதும் ஆவேசத்தோடு பாய்ந்தனர் அங்கே கூடியிருந்த வேந்தர்கள்.

சுயம்வர மண்டபம் ஒரு நொடியில் போர்க்களமாகி விட்டது. திரெளபதியும் தோழியர்களும் மனம் பதைத்து ஒதுங்கி நின்று கொண்டனர். அந்தணர்களுக்கும் அரசர் களுக்கும் யுத்தம் நடந்தது. அர்ச்சுனன் தனக்காகப் பரிந்து கொண்டு வந்த மற்ற வேதியர்களைத் தடுத்து நிறுத்தி விட்டுத் தானே தன் சகோதரர்களுடன் போரில் இறங்கினான். போர் உக்கிரமாக நிகழலாயிற்று. போரில் பல தேசத்து அரசர்கள் ஒன்று சேர்ந்திருந்ததனால் மிகச் சீக்கிரமே அர்ச்சுனன் அவர்களைச் சின்னாபின்னப்படுத்துவது சுலபமாக இருந்தது. எதிர்த்து வந்த மன்னர்கள் சிதறியோடினர். அர்ச்சுனனும் சகோதரர்களுமே இறுதியில் சுயம்வர மண்டபத்தில் எஞ்சினர். ‘மாறுவேடத்திலிருக்கும் இந்த ஐந்து அந்தணர்களும் பாண்டவர்கள் தாமோ?’ -என்ற சந்தேகம் தப்பி ஓடும் போது அரசர்களுக்கு ஏற்பட்டது. சுயம்வரத்திற்கு வந்த கண்ணபிரான் அரசர்களுடைய இந்தச் சந்தேகம் வலுத்து